(வி - ரை) மகரமும் னகரமும் ஆகிய ஈரெழுத்துக்களே இப்பாடல் முழுதும் வருதலின், இது ஈரெழுத்தால் வந்த மடக்காயிற்று. இதனை 'இருவருக்கப்பாட்டு' என்றும் கூறுவர். மூன்றெழுத்தான் வருவது எ - டு : | 'மின்னாவான் முன்னு மெனினு மினிவேனின் | | மன்னா வினைவே னெனைவினவா - முன்னான | | வானவனை மீனவனை மானவினை வென்வேன் | | மானவனை மானுமோ வான்' |
இ - ள் : மின்னா - மின்னி, வான் முன்னும் எனினும் - உருமேற்றினைத் தோற்றுவிக்கு மாயினும், இனி வேனில் மன்னா - பின்பு வேனிற்காலத்து நிலைபெற்று, இனைவேன் எனை - வருந்தும் என்னை, வினைவா - ஆராயாத, முன்னான வானவனை - எவர்க்கும் முதலாயுள்ள சேரனை, மீனவனை - பாண்டியனை, மான வினை வென் வேல் மானவனை - மதிப்புமிக்க மிக்கவினைகளோடு கூட வென்ற வேலினையுடையனாகிய மனுகுலக் காவலனை, மானுமோ வான் - ஒக்கவல்லதோ இத்தன்மைத்தாகிய மேகம் எ - று. வான் - உருமேறு. 'வென்ற' என்பது ஈறு குறைந்தது. இதில் மகரமும், னகரமும், வகரமும் ஆகிய மூன்றெழுத்துக்களே வருதல் காண்க. (வி - ரை) இது தலைவி கூற்று. தலைவனாகிய சோழன் தன்னைப் பற்றி நினையான் எனினும், அவனுடைய பெருமையும் கொடையும் இகழத்தக்கதன்று என்பாள், 'வான் மானவனை மானுமோ?' என்றாள். சோழனுடைய ஆணை ஏனைய இருநாடுகளிலும் இருந்ததுபற்றி அவனை வானவன் என்றும், மீனவன் என்றும் கூறினாள். இதன்கண் மகர, னகர, வகரமாகிய மூன்றெழுத்துக்களும் வந்துள்ளமையால், மூன்றெழுத்தால் வந்தமடக்காயிற்று. நான்கெழுத்துக்களால் வருவது எ - டு : | 'யானக வென்னே யினையனா வாக்கின | | கானக யானை யனையானைக் - கோனவனைக் | | கொன்னயன வேனக்க கோகனகக் கைக்கன்னிக் | | கன்னிக் கனியனைய வாய்' |
இ - ள் : யான் - எத்துணையும் சிறிய யான், நக - பழிக்க, கானக யானை அனையானை - காட்டு யானையை யொத்த, கோனவனை - நம் தலைவனை, இனையனா ஆக்கின - இத்தன்மையாகப் பண்ணினவை, கன்னி - ஒரு பெண்ணினுடைய, கொல்வேல் நயனம் - கொல்லுந் தன்மையை யுடைய வேலை யொக்கும் கண்களும், நக்க கோகனகக் கை - மலர்ந்த தாமரை போன்ற கைகளும், கன்னி கனி அனைய வாய் - யாவராலும் தீண்டப்படாத கொவ்வைக்கனி போலும் வாயுமாய் இருந்தது, என்னே - ஈதோர் ஆச்சரியமாய் இருந்தது! எ - று. (வி - ரை) இது பாங்கன் தன்மனத்து அழுங்கல் என்னும் துறையைச் சார்ந்தது. இதன்கண் யகரமும், னகரமும், ககரமும், வகரமும் ஆகிய நான்கெழுத்துக்களே மடங்கி வருதல் காண்க.
|