பக்கம் எண் :
 
206தண்டியலங்காரம்

ஒற்றெழுத்தின்றி வருவது

எ - டு :

'நுமது புனலி லளியி வரிவை
யமுத விதழி னிகலு - குமுத
மருவி நறவு பருக வளரு
முருவ முடைய துரை'

இ - ள் : அளி - வண்டே!, நுமது புனலில் - நீ பயிலும் பூந்தடங்களில், இ அரிவை - இம்மடந்தையுடைய, அமுதம் இதழின் - அமுதம் பொதியும் அதரம், இகலும் - ஒக்கும், குமுதம் - குமுத மலர்களில், மருவி - பல்காலும் பயின்று, நறவு பருக தேனைப் பருக, வளரும் உருவம் உடையது - பின்பும் தேன் உண்டாகும்படியை உடையது, உரை - (உண்டாயின்) சொல்லுவாயாக எ - று.

இதில், ஒற்றெழுத்தின்றி இருத்தல் காண்க.

(வி - ரை) இது தலைவன் வண்டை முன்னிலைப்படுத்திக் கூறியதாகும். 'பெருநயப்புரைத்தல்' என்னும் துறையைச் சாரும்.

 வல்லினத்தான் வருவது

எ - டு :

'துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோட
றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் - பொடித்துத்
தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் 1காட்டிற்றுக் காடு'

இ - ள் : தடித்து - மின்னலானது, துடித்து - நடுங்கித்தோன்ற, கோடல் துடுப்பு எடுத்த - காந்தள்கள் பூத்துக் குலைகளைத் தாங்காநின்றன; கடுக்கை பொன்போல் தொடை தொடுத்த - கொன்றைகள் பொன் போன்ற நிறத்தையுடைத்தாகிய பூக்களை மாலையாகத் தொடுத்துத் தூக்காநின்றன; பொடித்து - எல்லாருக்கும் தோன்ற, தொடி படைத்த தோள் துடித்த - வளையையுடைய தோளும் இடப்பக்கம் துடியாநின்றது; தோகை கூத்தாட - மயில்கள் களித்தாட, காடு கடி படைத்துக் காட்டிற்று - காடு புதுமையை விளைத்துக் காட்டாநின்றது எ - று.

இதில், முற்றும் வல்லெழுத்துக்களே வருதல் காண்க.

(வி - ரை) தடித் - மின்னலைக் குறிக்கும் வடசொல்.

 மெல்லினத்தான் வருவது

எ - டு :

'மானமே நண்ணா மனமென் மனமென்னு

மானமான் மன்னா நனிநாணு - மீனமா

மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினு

மானா மணிமேனி மான்'

இ - ள் : மானம் மான் மன்னா - பெரிய யானைகளையுடைய வேந்தனே!, ஆனா மினல் மின்னி - நீங்காது மின்னானது விளங்கி, முன் முன்னே நண்ணினும் - முன்னே முன்னே தோன்றினும்,


1. 'காட்டித்துக் காடு' என்பதும் பாடம்.