பக்கம் எண் :
 
சொல்லணியியல்207

மானா மணி மேனி - ஒவ்வாத அழகிய உருவத்தையுடைய, மான் - மானை யொப்பாள், மானமே நண்ணா மனம் - மானம் யாதும் மேவாத உள்ளம், என் மனம் என்னும் - எனது உள்ளம் என்னும்; நனி நாணும் - மிகவும் நாணும் குறைபடா நிற்கும்; ஈனமாம் - (ஆதலால், நீ இதுவரை வரைந்து கொள்ளா திருத்தல் நினது பெருமைக்குக்) குறைபாடாகும் எ - று.

இதில், முழுதும் மெல்லெழுத்துக்களே வருதல் காண்க.

(வி - ரை) தலைவன் நெஞ்சு தன்னிடத்து வாராதிருந்தும், தன் நெஞ்சு தலைவன்பால் சேறலின் 'மானமே நண்ணா மனம்' என்றாள். 'செற்றார் பின் சொல்லாப் பெருந்தகைமை காமநோய், உற்றார் அறிவதொன் றன்று' (குறள் - 1255) என்பது தலைவிக்கு அநுபவமாயிற்று.

இடையினத்தான் வருவது

எ - டு :

'யாழியல் வாய வியலள வாயவொலி
யேழிய லொல்லாவா லேழையுரை - வாழி
யுழையே லியலா வயில்விழி யையோ
விழையே லொளியா லிருள்'

 இ - ள் :யாழ் இயல்வாய - யாழின் இயற்றப்படாநின்ற, இயல் அளவு ஆய - இசை நூல் சொல்லிய அளவையுடைய, ஒலி ஏழ் இயல் - இசை ஏழும் கூடி, ஏழை உரை ஒல்லா - இப்பேதையுடைய மொழியுடனே நிகர்க்க மாட்டா; உழையேல் அயில் விழியை இயலா - மானின் விழியும் இவள் வேல் போலும் விழியை யொக்க மாட்டா; ஓ இழையேல் - வியக்கத்தக்க ஆபரணங்களினது ஒளியும், ஒளியால் - இப்பேதையுடைய ஒளியாலே, இருள் - நிறங்கெட்டு இருளாம் எ - று.

இதில், இடையெழுத்துக்களே வருதல் காண்க. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

(வி - ரை) ஆல், வாழி என்பன அசைகள்.

(4)

மடக்கு முற்றிற்று.

சித்திரகவி வருமாறு :-

சித்திரகவியின் வகை

97. கோமூத் திரியே கூட சதுக்கம்

மாலை மாற்றே எழுத்து வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்

அக்கரச சுதகமும் அவற்றின் பால.

எ - ன்,இன்னும் அவ்வெழுத்து மடக்கு அலங்காரத்துள் படுவனவான சில மிறைக்கவி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் :கோமூத்திரி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாவுத்தரம், காதைகரப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகம் ஆகிய பன்னிரண்டும், அவ்வெழுத்து மடக்கு அலங்காரத்தின் பாலவாய் வரும் எ - று.