பக்கம் எண் :
 
208தண்டியலங்காரம்

'அக்கரச் சுதகமும்’ என்னும் உம்மையால்,நிரோட்டம், ஒற்றுப் பெயர்த்தல், மாத்திரைச்சுருக்கம், மாத்திரை வருத்தனை, முரசபந்தம்,திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடு பாட்டு முதலியசித்திர கவிகள் எல்லாம் கொள்க.

அவற்றுள், (1) கோமூத்திரி என்பது இரண்டிரண்டுவரியாக ஒரு செய்யுளை எழுதி, மேலும் கீழும்ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே யாவது. 

எ - டு :

1'பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே'

 இ - ள் : பருவம் ஆக இது - அவர் குறித்தகாலம் இது வாதல் வேண்டும்; கனம் மாலை - மேகவொழுங்கானது, ஆசை மருவும் - திசைகள் எல்லாம்பொருந்தும், மாலையே கனம் விடா - (அதுவுமன்றி)மாலைப்பொழுதின்கண் மழையைவிடாது பொழியும்;பொருவிலா உழை - ஒப்பில்லாத மான்கள், மேவனகானமே - பொருந்தாநின்றன காட்டின்கண்; ஆயிழை -(ஆதலால்) குற்றமற்ற ஆபரணங்களை யுடையாய்!, வெருவல்- அஞ்சாதொழிவாயாக; பூ அணி காலமே - தலைவர்நம்மைப் பூவால் அலங்கரிக்கும் காலம் இது எ - று.

இதனுள் 'வேண்டும்' என்னும் சொல்வருவிக்கப்பட்டது. 'மேவின' என்பது 'மேவன' எனத்திரிந்து நின்றது.

பசுவானது நடந்துகொண்டே சிறுநீர் விடும்போது,அந்நீர் ஒழுகிய தாரையானது இவ்வாறே மேலும் கீழும்நெளிந்த வடிவமாய் இருக்கும்; அதுபற்றியே இதற்குக் கோமூத்திரிஎனப் பெயர் ஏற்பட்டது.

(2) கூடசதுக்கம் என்பது ஈற்றடி எழுத்துக்கள்ஏனை மூன்றடியுள்ளும் கரந்து நிற்கப் பாடுவது.

எ - டு :

'புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக்கட்பிறைப் பற்கறுத்த

பகைத்திறச் சொற்கெடச் செற்றகச் சிப்பதித் துர்க்கைபொற்புத்

தகைத்ததித் தித்ததுத் தத்தசொற் றத்தைப்பத் தித்திறத்தே

திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற் பற்றுக் கெடக்கற்பதே'

 இ - ள் : புகை தகை - நெருப்பின்தன்மையையுடைய, சொல் - சொற்களையும், படைக் கை -ஆயுதங்களோடு கூடிய கைகளையும், கதக்கண் -வெகுளியோடு கூடிய பார்வையையும், பிறைப்பல் - பிறைபோன்ற கோரப்பற்களையும், கறுத்த - கரிய


1. இப்பாடல், பருவ வரவுகண்டு தோழி,தலைமகளுக்குக்கூறியதாகும்.