(வி - ரை) ஒரு சொல்லிலுள்ள ஒற்றெழுத்தினை எடுத்துவிட, அது வேறு பொருள்படின் ஒற்றுப் பெயர்த்தலாகும். ஒரு செய்யுளில் ஒன்றி நிற்கும் வேறு பொருளைப் பெயர்த்தெடுப்பினும் ஒற்றுப் பெயர்த்தலாம். ஈண்டுக் காட்டப்பட்ட இரு பாடல்களுள், 'வண்புயலைக் கீழ்ப்படுத்து' என்ற பாடல் முன்னையதற்கு எடுத்துக் காட்டாகும். இப்பாட்டில் இறுதியில் உள்ள சொல் 'மாளிகை' என்பதாகும். அதில் முதற்கண்ணுள்ள மகர ஒற்றை எடுத்துவிட (ம் + ஆ), 'ஆளிகை' எனப் பொருள்படுதல் காண்க. இங்ஙனம் ஒற்றுப்பெயர்த்துப் பொருள் கொள்ளப்படுதலின், ஒற்றுப் பெயர்த்தல் ஆயிற்று. மாளிகை என்பதை ஒரு பொருளாகக் கொள்ளின் (கங்கா புரத்திலுள்ள) மாளிகை என்று பொருள்படும். ஆளி + கை எனப் பிரித்துத் தொடர்மொழியாகக் கொள்ளின், கங்கை கொண்ட சோழபுரத்தினை ஆளும் அநபாயனுடைய கை எனப் பொருள்படும். 'பொற்புடைய மாதர்' என்ற பாடலில் ஒன்றி நிற்கும் மரப்பெயர்கள் பத்தாகும். அவற்றைப் பெயர்த்து எடுத்துக் கொள்ளும்படியாக இருத்தலின் அதுவும் ஒற்றுப்பெயர்த்தல் ஆயிற்று. இங்ஙனம் வரும் ஒற்றுப் பெயர்த்தலின் இலக்கணத்தை விளக்குவதே 'ஓரடியுட் பத்துமரம்' என்ற பாடலாகும். இதன் பொருள் : ஒரு பாடலில் ஓரடியில் பத்து மரங்கள் வருதலோடு, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுடைய தேர் வருவதாகவும், அதனால் தலைவி பிணங்குவதாகவும் கூறும் மருதத்திணை ஒழுக்கம் சார்ந்துவர, வெண்பா யாப்பினதாய் உலகத்தார் ஏற்கும் கவியைப் புனையின், அது ஒற்றுப் பெயர்த்தலாகும் என்பதாம். இவ்விலக்கணப்படி 'பொற்புடைய மாதர்' என்ற பாடல் அமைந்திருத்தல் காண்க. சேர் - சேங்கொட்டை மரம். இல் - தேற்றா மரம். நறவு - சாப்பிரா என்னும் ஒருவகை மரம். ஆல் - ஆல மரம். (15) மாத்திரைச் சுருக்கம் என்பது, ஒரு பொருள் பயந்து நிற்பதொரு சொல், ஒரு மாத்திரையைக் குறைப்பப் பிறிதொரு பொருள் பயக்குஞ் சொல்லாய் நிற்பது. எ - டு : | 'நேரிழையார் கூந்தலின்ஓர் புள்ளிபெற நீண்மரமாம் | | நீர்நிலையோர் புள்ளிபெற நெருப்பாம் - சீரளவும் | | காட்டொன்(று) ஒழிப்ப இசையாம் அதனளவில் | | மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு' |
இ - ள் : நேரிழையார் கூந்தல் - ஓதி; இதில் ஒரு மாத்திரையைச் சுருக்க, ஒதி என்னும் மரமாம். நீர்நிலை - ஏரி; இதில் ஒரு மாத்திரையைச் சுருக்க, எரியாகிய நெருப்பாம். காடு - காந்தாரம்; இதில் ஒரு மாத்திரையைச் சுருக்கக் கந்தாரம் என்னும் பண்ணாம்; இதில் மீட்டும் ஒரு மாத்திரையைச் சுருக்கக் கழுத்தாம் எ - று. இதில் புள்ளி பெறுவதைப் பிரித்து 'விந்துமதி' எனினும் அமையும். (வி - ரை) 'புள்ளிபெற' என்ற தொடரை நீக்கி 'விந்துமதி' என்ற தொடரைச் சேர்ப்பினும் அமையும் என்பது கருத்து. விந்து - ஒற்று; மதி - அளவிடு. எனவே ஓதி என்பதில் ஒரு புள்ளியை அளவிட (எடுத்துவிட) ஒதி என்றாயிற்று என்பது கருத்து.
|