2. பொருளணியியல்
காப்பு
என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கும்
அன்னை யுடைய வடித்தளிர்கள் - இன்னளிசூழ்
மென்மலர்க்கே கன்று மெனவுரைப்பர் மெய்யிலா
வன்மனத்தே தங்குமோ வந்து .
(இ-ள்) மிகவும் இழிவான என்னை அடிமையாகவுடையாள் கலைமடந்தை , எல்லாவுயிர்க்குந் தாயாயுள்ளவளது தளிராகிய அடியிணைகளானவை , இனிதாகிய பண் முரலும் வண்டுகள் சூழ்கின்ற மிருதுவாகிய மலரின் மீது மிதிப்பினும் கன்றும் என்று சொல்லா நிற்பர் ; இத்தன்மையாகிய தளிரடிகள் , உண்மையற்ற கடினமாகிய என் மனத்தின்கண் வந்து நிலையாக நிற்கும் எ-று .
ஓகாரம் - அசை . கலைமடந்தை என்பதற்குக் கலையையூரும் வனதுர்க்கை என்பாருமுளர் .
பொருளணிகள்
27. தன்மை யுவமை யுருவகந் தீவகம்
பின்வரு நிலையே முன்ன விலக்கே
வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை
ஒட்டே யதிசயந் தற்குறிப் பேற்றம்
ஏது நுட்பம் இலேசம் நிரனிறை
ஆர்வ மொழிசுவை தன்மேம் பாட்டுரை
பரியா யம்மே சமாயிதம் உதாத்தம்
அரிதுண ரவநுதி சிலேடை விசேடம்
ஒப்புமைக் கூட்டம் மெய்ப்படு விரோதம்
மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி
நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே
வாழ்த்தொடு சங்கீ ரணம்பா விகம்இவை
1ஏற்ற செய்யுட் கணியே ழைந்தே .
இவ்வியல் என்ன பெயர்த்தோவெனின் , பொருளானாம் அணிகளது இயல்பு உணர்த்தினமையால் , பொருளணியோத்து என்னும் பெயர்த்து . அஃதேல் , சொல்லால் உணர்த்தப்படும் அணி ஈண்டு உணர்த்திலரோ வெனின் , மிகுதி பொருள்மேலதாகலான் மிக்கதனாற் பெயர் கொடுக்கப்பட்டது .
இவ்வியலினுள் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் , அலங்காரங்களின் பெயரும் , முறையும் , தொகையும் உணர்த்துதல் நுதலிற்று .
இ-ள்:தன்மையும் , உவமையும் , உருவகமும் , தீவகமும் , பின்வருநிலையும் , முன்ன விலக்கும் , வேற்றுப்பொருள் வைப்பும் , வேற்றுமையும் , விபாவனையும் , ஒட்டும் , அதிசயமும் , தற்குறிப்பேற்றமும் , ஏதுவும் ,
1. 'ஏற்ற செய்யுட் கியன்ற வணியே ' என்பதும் பாடம் .