நுட்பமும் , இலேசமும் , நிரனிறையும் , ஆர்வ மொழியும் , சுவையும் , தன்மேம்பாட்டுரையும் , பரியாயமும் , சமாயிதமும் , உதாத்தமும், அவநுதியும் , சிலேடையும் , விசேடமும் , ஒப்புமைக் கூட்டமும் , விரோதமும் , மாறுபடு புகழ்நிலையும் , புகழாப் புகழ்ச்சியும் , நிதரிசனமும் , புணர்நிலையும் , பரிவருத்தனையும் , வாழ்த்தும் , சங்கீரணமும் , பாவிகமும் என இவை முப்பத்தைந்தும் மேற்கூறிய செய்யுட்கு அலங்காரமென்று சொல்லப்படும் எ-று.
இவையெல்லாம் உம்மை தொகுத்து எண்ணேகாரம் இடையிட்டு எண்ணப்பட்டவற்றை அவ்வும்மை விரித்து உரைக்கப்பட்டன . தன்மையும் உவமையும் என விரித்துக்கொள்க .
அஃதேல் , இது முறைமையாயினவாறு என்னையோ வெனின் , இயல்பு விகாரம் 1என இரண்டல்லது வேறில்லை ; அவற்றுள் தன்மை , இயல்பாகலான் 2முற்கூறப்பட்ட முறைமைத்தாய்த் தன்மை யென்றும் சொன்னடையென்றும் சொல்லப்படும் . உவமை விகாரமாய் மிக்க வரவிற்றாய்ப் 3பின் வருகின்ற பல அலங்காரங்கட்கு உபகார முடைத்தாகலால் தன்மையின்பின் வைக்கப்பட்டது . ஒழிந்தனவும் வைத்தவாறு உய்த்துணர்ந்து கொள்க ; ஈண்டுரைப்பிற்பெருகும் , அல்லதூஉம் தொல்லாசிரியர் சொல்லிய நெறியெனினும் அமையும் .
இனி 'ஏற்ற' என்றதனால் சில செய்யுட்கு ஏற்றுச் சில செய்யுட்கு ஏலாதனவும் உள ஒருதிறத்து அணி எனக் கொள்க .
'அரிதுண ரவநுதி' என்று சிறப்பித்தவதனால் , சிறப்பு முதலாயின வற்று உண்மை மறுக்குங்கால் , அம்மறையானே ஒரு புகழ் தோன்ற வைக்கப்படுமென்பது . அஃது அதன் இலக்கணம் கூறும் வழியே உணர்ந்து கொள்க .
'மெய்ப்படு விரோதம்' என்பதற்கு மெய்யென அடை கொடுத்தது , 4தமிழாசிரியர் முரண்தொடை என்று தொடைப்பாற்படுத்துச் செய்யுட்கு உறுப்பாக்கினார் ; இவ்வாசிரியர் அதனை அலங்காரத்தின்பாற் படுத்தினாராகலின் அவ்வேறுபாடு அறிவித்தற்கு எனக் கொள்க .
இவையெல்லாம் 5மேற் சூத்திரச் சுருக்க நோக்கி ஈண்டு உரைக்கப்பட்டன . ஒழிந்த அகலம் உரையிற் கொள்க .
1. தன்மையணி
28. எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும் .
எ-ன் நிறுத்த முறையானே தன்மை யென்னும் அலங்காரத்துப் பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று .
இ-ள்:எவ்வகைப்பட்ட பொருளும் , மெய்ம்மைக் கூறுபாட்டான் விளக்குஞ் சொன்முறையாற் பாடப்படுவது தன்மை என்னும் அலங்காரமாம் எ-று .
1. 'என்று இரண்டலவே அவற்றுள்' என்பதும் பாடம் .
2. 'முற்படு முறைமைத்தாய்' என்பதும் பாடம் .
3. 'பிற வக்கிரநடை அலங்காரங்கட்கு' என்பதும் பாடம் .
4. தமிழாசிரியர் - யாப்பிலக்கண ஆசிரியர் .
5. மேற் சூத்திரக் கருத்து நோக்கி என்பதும் பாடம் .