பக்கம் எண் :
 
34தண்டியலங்காரம்

பொன் தன்னை மறந்தாள் எனக் கூட்டுக . பூந்தாமரை - சீர்பாதம் . 'உரையுந்தள்ள' என்னும் உம்மையான் , நாணம் , மடம், அச்சம் , பயிர்ப்பு என்பனவும் தளர எனக் கொள்க . புள்ளலைக்கும் வயல் - புள்ளலைக்கும் தாமரை எனினும் அமையும் .

வி-ரை: இது தில்லை நடராசப் பெருமானைத் தொழுதலால் ஆகும் இன்பத்தின் தன்மையைக் கூறுதலின் குணத்தன்மையாயிற்று .

3. சாதித் தன்மை

'பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியும்
துத்திக் கவைநாத் துளையெயிற்ற - மெய்த்தவத்தோர்
ஆகத்தான் அம்பலத்தான் ஆரா வமுதணங்கின்
பாகத்தான் 1சாத்தும் பணி'

(இ-ள்) பத்தியாகிய வரைகள் பொருந்திய வயிற்றினை யுடையனவாய்க் கருமையாகிய மிடற்றினை யுடையனவாய்ப் படத்தின்கண் விரிந்த பொறி நிறத்தையும் , இரண்டு பிரிவான நாவையும் , புரையையுடைய பல்லினையும் உடையனவாயிருப்பன ; மெய்யாகிய தவத்தினையுடையோர் அகத்தின்கண்ணுள்ளான் , அம்பலத்திலே நிற்பான் , பருகாத அமுதமன்ன உமாதேவியின் பாகத்தை யுடையான் சாத்தும் பணிகள் எ-று .

'பத்தித்த அகட்ட' என்பது 'பத்தித் தகட்டவென விகாரமாயிற்று . அகடு - வயிறு . துத்தி - நிறம் . 'அகத்தான் ' என்பது 'ஆகத்தான்' என முதல் நீண்டது . ஆர்தல் - உண்ணல் .

வி-ரை: இது பாம்புச் சாதியின் பலவிதமான தன்மைகளைக் கூறுதலின் சாதித்தன்மையாயிற்று .

4. தொழிற்றன்மை

'சூழ்ந்து முரன்றணவி வாசந் துதைந்தாடித்
தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் - 2வீழ்ந்தபெரும்
பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை
வாசத்தார் நீங்காத வண்டு '

(இ-ள்) பாச நீங்கிய முத்தர்களை விட்டு நீங்காத பரஞ்சோதியின் வாசனையையுடைய பசுமையாகிய கொன்றை மாலையைப் பிரியாத வண்டு , சூழ்ந்து பண்ணை முரன்று சேரச் சென்று மணத்தைச் செறிந்து மீதே பறந்து விரும்பி மதுவையுண்டு தாதைக் கோதா நிற்கும் எ-று .

துதைதல் - செறிதல் . ஆடுதல் - பறத்தல் . தாழ்தல் , வீழ்தல் - விரும்புதல் . நுகர்தல் - உண்டல் . அருந்துதல் - கோதுதல் .

அல்லதூஉம் ,

'மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி'


1. 'சூடும் பணி' என்பதும் பாடம்.

2. 'வீழ்ந்தவிழ்ந்த' என்பதும் பாடம் .