விருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்புல் லடக்கிய வெண்பல் லெயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவின்
நீழன் முன்றி னிலவுரற் பெய்து ' (பெரும்பாண் : 89 - 96)
என்பதூஉம் அவ்வலங்காரம் . இஃது இலக்கியத்திற் சிறுபான்மை ; இலக்கணத்துள்ளே பயின்று வருமெனக் கொள்க .
வி-ரை: 'சூழ்ந்து ......... வண்டு' - இப்பாடல் வண்டு தாதருந்துதலாகிய தொழிற்கண் உள்ள பலவிதமான தன்மைகளைக் கூறுதலின் , தொழில் தன்மையாயிற்று .
'மான்றோற் பள்ளி' என்று தொடங்கும் பாடல் , எயிற்றியர் புல்லரிசிச் சோறு அமைக்குமாற்றை விவரிக்கும் பகுதியாகும் . இப்பகுதிக்குரிய பொருள் :- 'பிள்ளையைப் பெற்ற எயிற்றி மான் தோலாகிய படுக்கையிலே அப்பிள்ளையுடன் முடங்கிக் கிடக்க , ஒழிந்தோர் போய்ப் பூண் தலையிலே அழுத்தின நன்றாகிய திரட்சியையும் வலியையும் உடைத்தாகிய வயிரத்தினையுமுடைய சீரிய கோல் செருகின உளிபோலும் வாயினையும் உடைய பாரைகளாலே , கட்டிகள் கீழ் மேலாகக் குத்துகையினாலே , கருநிலமாகிய கரம்பை நிலத்திலுண்டாகிய புழுதியை அளைந்து மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக் கொண்ட வெள்ளிய பல்லையுடைய எயின் குடியிற் பிறந்த மகளிர் பார்வைமான் கட்டி நின்ற தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத்திடத்துத் தோண்டின நிலவுரலிலே அப்புல்லரிசியைச் சொரிந்து' (நச்சினார்க்கினியர் உரை)
இது எயிற்றியர் புல்லரிசியைக் காடுகளிலிருந்து கொண்டு வந்ததாகிய தொழில் தன்மையைக் கூறுதலின் , தொழில் தன்மையாயிற்று .
2. உவமையணி
30. பண்புந் தொழிலும் பயனுமென்(று) இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்(து)
ஒப்புமை தோன்றச் 1செப்புவ(து) உவமை .
எ-ன் உவமை என்னும் அலங்காரத்தின் பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று .
(இ-ள்) பண்பு , தொழில் , பயன் என்பன காரணமாக ஒன்றாகியும், பலவாகியும் வரும் பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்புமை புலப்படப் பாடுவது உவமை யென்னும் அலங்காரமாம் எ-று .
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்தலாவது - ஒரு பொருளோடு ஒரு பொருளும் , ஒரு பொருளோடு பல பொருளும் , பல பொருளோடு பல பொருளும் , பல பொருளோடு ஒரு பொருளும் இயையவைத்துப் பாடுவது .
1. 'செப்பி னஃதுவமை' என்பதும் பாடம் .