அவற்றுள்,
1. பண்புவமை
'பவளத் தன்ன மேனி ' (குறுந் - கடவுள்) எனவும் , 'வேய்புரை பணைத்தோள்' எனவும் , 'தெம்முனை யிடத்திற் சேயகொல் , அம்மா வரிவை யவர் சென்ற நாடே ' எனவும் வரும்.
2. தொழிலுவமை
'அரிமா வன்ன வணங்குடைத் துப்பிற், றிருமா வளவன் ' (பட்டினப் : 298 -9) எனவும் , 'களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கின் , ஒளித்தியங்கு மரபின் வயப்புலிபோல , நன்மனை நெடுநகர் காவலர் அறியாமை.......நோய்தணி காதலர்வர' (அகம் - 22) எனவும் வரும் .
3. பயனுவமை
'மாரி யன்ன வண்மைத் , தேர்வே ளாயைக் காணிய சென்மே ' (புறம் - 133) எனவும் , 'செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை ' (திருமுருகு - 5) எனவும் வரும்.
அஃதேல் ' வேய்புரை பணைத்தோள் ' என்பது வடிவுவமை எனவும் , 'தெம்முனை யிடத்திற் சேயகொல் ' என்பது எல்லையுவமை எனவும் சொல்லுபவா லெனின் ;
'வண்ணத்தின் வடிவின் அளவிற் சுவையினென்(று)
அன்ன பிறவும் அதன்குணம் நுதலி
இன்ன திதுவென வரூஉ மியற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே '
-தொல் - சொல் -416.
என்புழி வடிவும் பண்பெனக் கூறினார் ஆசிரியர் தொல்காப்பியனார் . சேய்மை அணிமை என்பனவும் அளவாகலாற் பண்பெனப்படும் .
இனி , ஒரு பொருளோடு ஒரு பொருள் : செவ்வான் அன்ன மேனி , (அகம் - கடவுள் வாழ்த்து ) எனவும் , ஒரு பொருளோடு பல பொருள் : 'அவ்வான் , இலங்கு பிறை யன்ன விளங்குவால் வையெயிற்று ' (அகம் - கடவுள் ) எனவும் , பல பொருளோடு பல பொருள் : 'களிறே...சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப , மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே '(புறம் - 13) எனவும் , பல பொருளோடு ஒரு பொருள் ; 1பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லார்....பீடின் மன்னர் போல , ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே ' (அகம் -125) எனவும் வரும்.
அஃதேல் உவமையும் பொருளும் ஒத்த பண்புமாவன யாவை ? யெனின் : 'பவளம் போலுஞ் செவ்வாய் ' என்புழிப் 'பவளம்' உவமை யெனவும் , உவமானம் எனவும் படும் . 'வாய்' பொருள் எனவும் , உவமேயம் எனவும் படும் . 'செம்மை ' இரண்டிற்கும் பொதுவாகிய குணம் எனப்படும் . 'போலும் ' என்பது உவமை யுருபிடைச்சொல்.இஃது பண்பு காரணமாக வந்த உவமை எனப்படும்.இதனை உவமை யென்றது என்னை யெனின் , 'பவளவாய் ' என்பதனைத் தொகையுவமை என்றும் , 'பவளச் செவ்வாய் என்பதனை விரியுவமை என்றுங் கூறுபவாதலான். அல்லதூஉம்
1. 'பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் ' என்பதும் பாடம்.