பக்கம் எண் :
 
42தண்டியலங்காரம்

வி-ரை: இதரவிதரம் - ஒன்றற்கொன்று . கண்ணிற்குக் கயலை உவமை கூறிப் பின் அக்கயலுக்கே கண்ணை உவமை கூறுகின்றமையும் முகத்திற்குத் தாமரையை உவமை கூறிப் பின் அத்தாமரைக்கே முகத்தை உவமை கூறுகின்றமையும் இதரவிதரமாம் . முன்னிரண்டடி ஒருதொடராயும் , பின்னிரண்டடி ஒரு தொடராயும் வருதலின் ஒரு தொடர்ச்சிக் கண்ணே இவ்வுவமை வந்ததாயிற்று .

'தளிபெற்று வைகிய' என்ற பாடல் முழுதும் ஒரே தொடராம் . நீலத்திற்குக் கண்ணை உவமை கூறிப் பின் அக்கண்ணிற்கே நீலத்தை உவமை கூறினமையின் இதர விதரமாயிற்று . இதனைத் 'தடுமாறு உவமை' என்பர் தொல்காப்பியர் .

(4) சமுச்சய வுவமை என்பது 1இதனை யொப்பது இதனானேயன்றி இதனானும் ஒக்கும் என்பது .

எ-டு : 'அளவே வடிவொப்ப தன்றியே பச்சை
இளவேய் நிறத்தானு மேய்க்கும் - துளவேய்
கலைக்குமரி போர்துளக்குங் காரவுணர் வீரம்
தொலைக்குமரி யேறுகைப்பாள் தோள் '

(இ-ள்) துழாய் மாலையைச் சூடிய கலைமடந்தையாகிய கன்னி , போரிடத்துப் பகைவரை நடுக்கஞ் செய்யவற்றாய 2வெகுளியினையுடைய அசுரருடைய ஆண்மையைக் கெடுக்கும் சிங்கப் போத்தை வாகனமாக வுடையாள் தோள்களைப் பசிய இளவேயானது அளவினானும் வடிவினானும் ஒப்பதன்றிப் பசுமை நிறத்தானும் ஒக்கும் என்றவாறு .

ஏறுஉகைக்கும் கன்னி தோளெனக் கூட்டுக . கன்னியுடைய தோள்களானவை வேயைப் பண்பினாலும் ஒக்கும் எனினும் அமையும் . ஏய்க்கும் - ஒக்கும் . காரவுணர் - வெகுளியை யுடைய அசுரர் .

வி-ரை: வெற்றித் திருவின் தோள்களை மூங்கிலானது அளவினாலும் வடிவினாலுமேயன்றி நிறத்தினாலும் ஒக்கும் என்பதால் இது சமுச்சயவுவமையாயிற்று . சமுச்சயம் - இரண்டு மூன்று முதலியவைகளின் கூட்டம் . ஒரு பொருளோடு ஒரு பொருள் உவமையாங்கால் ஒரு காரணத்தாலன்றி ஈண்டு இரண்டு மூன்று காரணங்களாலும் உவமையாயிற்று என்றலின் சமுச்சய மாயிற்று .

கலைக்குமரி - கலைமானை ஊர்தியாக உடையவள் என்றல் பொருந்துவதாம் . வெற்றித் திருவிற்கு (துர்க்கைக்கு) மானும் , சிங்கமும் ஊர்தி என்ப . திருமாலுக்குத் தங்கையாதல்பற்றித் துளவ மாலை உரியதாயிற்று .

(5) உண்மை யுவமை என்பது உவமையைக் கூறி மறுத்துப் பொருளினையே கூறி முடிப்பது .


1. 'அதனானே யன்றி இதனை இஃது ஒப்பது இதனானும் என்பது' என்பது பாடம் .

2. 'கருமையான நிறத்தையுடைய அசுரரின்' என்பதும் பாடம் .