எ-டு : 'தாமரை யன்று முகமேயீ தீங்கிவையும்
காமருவண் டல்ல கருநெடுங்கண் - தேமருவு
வல்லியி னல்லள் இவளென் மனங்கவரும்
அல்லி மலர்க்கோதை யாள் '
(இ-ள்) இது தாமரை மலரன்று முகமே ; இவையும் அழகு மருவிய வண்டல்ல , கறுத்து நீண்ட கண்களே ; தேன் மருவப்பட்ட கொடியல்லள் இவள் மடந்தையே . இத்தன்மைத்தாகிய அவயவங்களுடைய இவள் என்னுள்ளங்கவரும் அகவிதழ்களையுடைய பூவாற் செய்யப்பட்ட மாலையினையுடையாள் எ-று .
இன் - சாரியை , அல்லிமலர்க்கோதையாள் - சீதேவி என்பாருமுளர் .
வி-ரை: முகம் , கண், பெண் , ஆகிய மூன்று பொருள்களுக்கும் முறையே தாமரை , வண்டு , வல்லி ஆகிய மூன்று உவமைகளைக் கூறிப் பின்பு மறுத்துச் சொல்லப்பட்டமையால் இது உண்மை யுவமையாயிற்று .
(6) மறுபொரு ளுவமை என்பது முன்னர் வைத்தபொருட்கு நிகராவதொரு பொருளைப் பின்னர் வைப்பது .
எ-டு : 'அன்னைபோல் எவ்வுயிருந் தாங்கும் அனபாயா !
நின்னையார் ஒப்பார் நிலவேந்தர் - அன்னதே
வாரி புடைசூழ்ந்த வையகத்திற் கில்லையால்
சூரியனே போலுஞ் சுடர் '
(இ-ள்) தாயினை யொப்பாக எவ்வகைப்பட்ட உயிர்களையும் தாங்கும் அனபாயனே ! நிலத்திலுண்டாகிய வேந்தரில் உன்னை யொப்பாராருமில்லை ; அதுபோலக் கடல் சூழ்ந்த வையகத்திற்குச் சூரியனை யொக்குஞ் சுடரும் இல்லை எ-று .
சுடர் - ஒளி ; விளக்குமாம் .
வி-ரை: இப்பாடலில் முன்னர் வைத்த பொருள் அனபாயன் . பின்னர் வைத்த பொருள் சூரியன் . உலகிற்கு அனபாயனைப்போல் தாங்குநர் எவரும் இல்லையாதல்போல , இருளை நீக்குதற்கும் சூரியனையொத்த சுடர் இல்லை எனக் கூறுதலின் இது மறுபொருளுவமையாயிற்று .
(7) புகழுவமை என்பது உவமையைப் புகழ்ந்து உவமிப்பது .
எ-டு : 'இலறயோன் சடைமுடிமேல் எந்நாளுந் தங்கும்
பிறையேர் திருநுதலும் பெற்ற - தறைகடல்சூழ்
பூவலயந் தாங்கும் அரவின் படம்புரையும்
பாவைநின் னல்குற் பாப்பு '
(இ-ள்) ஒலிக்கின்ற கடலாற் சூழப்பட்ட நிலப்பரப்பைத் தாங்குகின்ற சேடனுடைய படப்பரப்பை ஒக்கின்றது உனது அல்குல் ; அதுவேயன்றி , முக்கட் கடவுள் முடியினைப் பிரியாது எந்நாளும் தங்கும் பிறையினுடைய அழகினை நின்னுடைய நுதலும் பெற்றது ; ஆதலால் , பாவாய் ! நின்னுருவத் தன்மையிருந்தபடியென் ? எ-று .
ஏர் - அழகு . பூவலயம் - நிலப்பரப்பு .
வி-ரை: நுதலுக்குக் கூறப்பட்ட பிறையும் , அல்குலுக்குக் கூறப்பட்ட அரவின் படமும் முறையே 'இறையோன் சடைமுடிமேல் எந்நாளும் தங்கும் '