பக்கம் எண் :
 
44தண்டியலங்காரம்

என்றும், 'அறைகடல்சூழ் பூவலயந் தாங்கும்' என்றும் புகழ்ந்து உவமிக்கப் பட்டிருத்தலின் இது புகழுவமை யாயிற்று.

(8) நிந்தையுவமை என்பது உவமையைப் பழித்து உவமிப்பது.

எ-டு: 'மறுப்பயின்ற வாண்மதியு மம்மதிக்குத் தோற்கும்
நிறத்தலரு நேரொக்கு மேனும் - சிறப்புடைத்துத்
தில்லைப் பெருமா னருள்போல் திருமேனி
முல்லைப் பூங்கோதை முகம்'

(இ-ள்) தில்லைக்கண் கூத்தாடுகின்ற பெரியோன் அருளையொத்த அழகிய மேனியினையுடைய, முல்லைப் பூவாற் செய்யப்பட்ட கோதையினையுடையாள் முகமானது மறுப்பிரியாத ஒளியினையுடைத்தாகிய மதியமும், அம்மதியத்திற்குக் கருகுகின்ற தாமரை மலரும் உவமிக்கப் பொருந்துமெனினுஞ் சிறப்புடையது எ-று.

நிறத்தலர் - தாமரை மலர். தோற்றல் - கருகுதல்.

வி-ரை: முகத்திற்கு உவமையாகிய மதியையும், தாமரையையும் முறையே களங்கம் உடையது என்றும், மதிக்குத் தோற்கும் என்றும் பழித்துப் பின் 'நேரொக்குமேனும்' என்பதால் உவமித்துக் கூறுவதால் இது நிந்தை யுவமையாயிற்று.

இரவில் தாமரை குவிந்திருத்தல் நோக்கி 'மதிக்குத் தோற்கும்' என்றார்.

(9) நியம வுவமை என்பது இன்னதற்கு இன்னதே உவமையாம் எனத் தேற்றேகாரம் புணர்த்துத் துணிந்து சொல்லுவது.

எ-டு: 'தாதொன்று தாமரையே நின்முகம் ஒப்பதுமற்
றியாதொன்று மொவ்வா திளங்கொடியே! - மீதுயர்ந்த
சேலே பணியப் புலியுயர்த்த செம்பியர்கோன்
வேலே விழிக்கு நிகர்'

(இ-ள்) இளங்கொடியை ஒப்பாய்! எல்லாருடைய கொடிக்கு மேலாகவுயர்ந்த பாண்டியனுடைய சேற்கொடி தாழத், தனது புலிக்கொடியை யுயர்த்த சோழனுடைய வேலே விழிக்கு நிகராவது; தாதுக்கள் பொருந்தியிருக்கப்பட்ட தாமரை மலரே நின்முகத்தை ஒப்பது; இவையல்லது உன் விழியினையும் உலகத்துண்டாகிய யாவும் ஒவ்வா எ-று.

சேலே என்பதில், ஏகாரம் - அசை.

வி-ரை: முகத்திற்கும் விழிக்கும் உவமை கூறுங்கால் முறையே தாமரையே நின்முகம் ஒப்பது என்றும், வேலே விழிக்கு நிகர் என்றும் தேற்றேகாரம் புணர்த்துத் துணிந்து சொல்லியிருப்பதால் இது நியமவுவமையாயிற்று.

நியமம் - வரையறைப்படுத்தி உரைப்பது.

(10) அநியம வுவமை என்பது நியமித்த வுவமையை விலக்கிப் பிறிதும் இப்பெற்றியனவாம் என்பது.

எ-டு: 'கௌவை விரிதிரைநீர்க் காவிரிசூழ் நன்னாட்டு
மௌவல் கமழுங் குழன்மடவாய்! - செவ்வி
மதுவார் கவிரேநின் வாய்போல்வ தன்றி
அதுபோல்வ துண்டெனினு மாம்'