பக்கம் எண் :
 
பொருளணியியல்45

(இ-ள்) ஆரவாரத்தையும் பரந்த திரைகளையும் உடைத்தாகிய நீரையுடைய காவிரி சூழ்ந்த நன்னாட்டின்கண் மௌவற் பூவாற் செய்த மாலையானது நாறப்பட்ட குழலினையுடைய மடவாய்! செவ்வியும் தேனும் நிறைந்த முருக்கிதழே நின்வாயை யொப்பது ; அதுவன்றி, அப்பூப் போல்வது உலகத்து உண்டாயினும் நின்வாயை யொக்கும் எ-று.

கவிர் - முருக்கு.

வி-ரை: வாய்க்கு முருக்கிதழே உவமை கூறத்தகும் என முன்னர் நியமித்துப், பின்பு அம்முருக்கிதழ் போன்ற பிற பொருள்களுண்டெனினும் அதற்குவமையாகும் எனக் கூறப்படுதலின் இது அநியம வுவமையாயிற்று.

அநியமம் - வரையறையின்றி உரைப்பது.

(11) ஐயவுவமை என்பது உவமையையும் பொருளையும் ஐயுற்று உரைப்பது.

எ - டு : 'தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல் !
மாதர் விழியுலவு வாண்முகங்கொல் ! - யாதென்
றிருபாற் கவர்வுற் றிடையூச லாடி
ஒருபாற் படாதென் னுளம்'

(இ-ள்) தாதைக் கலந்து வண்டுகள் சூழப்பட்ட தாமரை மலரோ காதலைச் செய்கின்ற விழியுலவுகின்ற ஒளியினையுடைய முகமண்டலமோ ! என்னென்று என் மனமானது ஊசலைப்போலாடி இருதலைப்பட்டு ஒன்றன்கண் துணிகின்றதில்லை எ-று.

இடையூசலாடி - ஈரிடத்தும் போய் மீண்டு. இருபாற் கவர்வுற்று - இரண்டனையும் ஆசைப்பட்டு. கொல் - ஐயம்.

வி-ரை: தாமரையாகிய உவமையையும், முகமாகிய பொருளையும் உறுதியாகத் தெரியாது இதுவோ, இதுவோ என ஐயுற்றுரைத்தலின் இது ஐயவுவமையாயிற்று.

(12) தெரிதருதேற்ற வுவமை என்பது ஐயுற்றதனைத் தெரிந்து துணிவது.

எ - டு: 'தாமரை நாண்மலருந் தண்மதியால் வீறழியும்
காமர் மதியுங் கறைவிரவும் - ஆமிதனால்
பொன்னை மயக்கும் புனைசுணங்கி னார்முகமே
என்னை மயக்கு மிது'

(இ-ள்) நாட்காலை மலருந் தாமரையும் குளிர்ந்த மதியினாலே அழகு கெடும் ; அழகிய மதியும் களங்கத்தோடு கூடியிருக்கும் ; ஆதலால், என்னை மயக்கஞ் செய்த இது, பொன்னையொப்பாக அலங்கரிக்கப்பட்ட சுணங்கினையுடையாளுடைய முகமே எ - று.

காமர் - அழகு. மயக்கும் - ஒக்கும்.

வி-ரை: முகத்தைக் கண்டு இது தாமரையோ, மதியோ என முன்னர் ஐயுற்றுப் பின்னர், அது தாமரையேல் மதியத்தைக்கண்டு குவியும்; மதியேல் களங்கம் உடைத்தாயிருக்கும்; இவ்விரண்டும் இன்றி எஞ்ஞான்றும் மலர்ச்சியும், களங்கமின்றியும் இருத்தலின் முகமே எனத்தெளிந்து உரைக்கப்பட்டுள்ளமையின் இது தெரிதருதேற்ற வுவமையாயிற்று.