பக்கம் எண் :
 
46தண்டியலங்காரம்

கன்னாகம் திரு.குமாரசாமிப் புலவர் அவர்கள் இதனைத் 'தேற்றவுவமை' என்பர். உண்மையுவமை மயக்கவுணர்வு காரணமாகத் தோன்றும் ; இது ஐயவுணர்வு காரணமாகத் தோன்றும் என வேற்றுமை காண்பர் அவர்.

(13) இன்சொலுவமை என்பது பொருளினும் யுவமைக்கொரு மிகுதி தோன்றக் கூறியுவமித்து, இன்ன மிகுதியையுடைத்தேனும் ஒப்பதன்றிச் சிறந்ததன்று என்பது.

எ-டு 'மான்விழி தாங்கு மடக்கொடியே ! நின்வதனம்
மான்முழுதுந் தாங்கி வருமதியம் - ஆனாலும்
முற்றிழை நல்லாய் ! முகமொப்ப தன்றியே
மற்றுயர்ச்சி யுண்டோ மதிக்கு'

(இ-ள்) நிறைந்த அணிகளையுடைய நல்லாய் ! நின்னுடையமுகமானது மானின்விழி யொன்றனையே தாங்கா நின்றது ; ஆகாயத்தின்கண் வருகின்ற மதியானது மானின் அவயவ முழுதும் தாங்கா நின்றது ; இப்படி முழுவதுந் தாங்கினும் நின் முகத்தை யொப்பதன்றியே விசேடமுடைத்தாகவற்றே அம்மதியம் ? எ-று.

வி-ரை: இதன்கண் கூறப்பட்ட பொருள் முகம். உவமப் பொருள் மதியம். முகம் மானின் விழியை மட்டுமே கொண்டுள்ளது. மதியமோ மான் வடிவம் முழுவதையும் தாங்கி நிற்கின்றது. இவ்வாற்றான் முகத்தினும் மதியம் உயர்ந்திருப்பினும், அம்மதியமும் முகத்திற்கு உவமையாதலன்றி வேறு உயர்வு கூறப்படுதற்குண்டோ ? எனக்கூறுதலின் இது இன்சொல் உவமையாயிற்று.

(14) விபரீதவுவமை என்பது மேற்றொட்டு உவமையாய் வருவதனைப் பொருளாக்கிப், பொருளாய் வருவதனை யுவமையாக்கியுரைப்பது.

எ-டு 'திருமுகம் போல்மலருஞ் செய்ய கமலம்
கருநெடுங்கண் போலுங் கயல்கள் - அரிவை
இயல்போலு மஞ்ஞை யிடைபோலும் கொம்பர்
மயல்போலும் யாம்போம் வழி'

இ-ள்: அரிவையுடைய திருமுகத்தையொப்ப மலரும் சிவந்தகமலம்; கறுத்த நெடிதாகிய கண்கள் போலும் கயல்கள்; சாயல்போலும் மயில்; மருங்குல் போலும் கொம்பு; ஆதலால் இவ்வழியில் யாம்போகின்ற போக்கு மயல் போலும் எ-று.

இயல் - சாயல். மயல் - ஆசை.

'ஒவத் தன்ன வுண்டுறை மருங்கிற்
கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை' -சிறுபாண்: 70 - 73 என்பதூஉம் அது.

வி-ரை: மேற்றொட்டு - பண்டுதொட்டு. பண்டுதொட்டுப் பெண்களின் முகத்திற்குத் தாமரையையும், கண்களுக்குக் கயலையும், சாயலுக்கு மயிலையும், இடைக்குக் கொம்பையும் உவமை கூறல் இயல்பு. அவ்வியல்பை மாற்றித் தாமரை, கயல், மயில், கொம்பு ஆகிய உவமைப்பொருள்களைப் பொருளாக்கியும் முகம், கண், சாயல், இடை ஆகிய பொருள்களை உவமையாக்கியும் கூறப்பட்டிருத்தலின் இது விபரீத வுவமையாயிற்று.