பக்கம் எண் :
 
பொருளணியியல்55

(இ-ள்) நல்லாய் ! நின்னிடத்திலே நின் முகத்தினைக் காணா நின்றேம் ; பெரிதாகிய பொய்கையிலே தாமரையையும் காணா நின்றேம் என்கிற இத்தன்மையேயன்றி வேறுபாடு கண்டிலேம் , மதுவினையுடைத்தாகிய தாமரைக்கும் நின் முகத்திற்கும் எ-று .

உழை - இடம் .

'பாலினிடை நீல மணிநிறஞ்சேர் பான்மைபோல்
ஞாலம் பரந்த நகைநிலவும் - மாலிருளாம்
வைம்மருவு மூவிலைவேல் வன்கட் டமருகக்கைச்
செம்மல் கருமாமை சேர்ந்து '

என்பதூஉம் அது .

இ-ள்:நீலமணியானது பாலைச் சேர்ந்து தன் ஒளியைப் பாலுக்குக் கொடுத்தாற்போலக் , கூர்மை மருவிய மூன்று தலையையுடைய சூலத்தையும் , வலிய கண்ணையுடைய தமருகத்தையும் உடைய கையனாகிய பரமசிவன் மிடற்றிலுண்டாகிய கறுத்த நிறத்தைச் சேர்ந்து உலகத்திற் பரந்த வெண்மையுடைய நிலவும் பெரிய இருள்நிறம் பெற்றது எ-று .

மால் - பெருமை , மாமை - நிறம் . செம்மல் - பெரியோன் , பான்மை - தன்மை . நகை - வெண்மை .

வி-ரை: ' மனப்படு மொருபொருள் வனப்பு உவந்துரைப்புழி , உலகுவரம் பிறவா நிலைமைத் தாகி , ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்' என்பது அதிசய அணியின் இலக்கணமாகும் . 'நின்னுழையே ......... செந்தாமரைக்கு ' இப்பாடலில் முகத்தின் அழகை உவந்து , அதற்கும் உவமையாகிய தாமரைக்கும் , அவை சார்ந்திருக்கும் இடங்களாலன்றி வேற்றுமையில்லையென அதிசயிக்குமாறு கூறப்பட்டிருத்தலின் அதிசயவுவமையாயிற்று .

'பாலினிடை ........ சேர்ந்து' - இப்பாடலில் எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் சிவபெருமானின் மிடற்றிலுள்ள கருமை . அத்தகைய கருமிடற்றினை யுடைய சிவபெருமானைச் சார்ந்ததால் வெண்மையான மதியமும் கருநிறமாய களங்கத்தைப் பெற்றது என ஆன்றோர் வியக்குமாறு அதிசயத்துக் கூறலின் அதிசயமாயிற்று . சிவபெருமான் தனது நிறத்தை மதியத்திற்குக் கொடுத்தது , நீலமணியானது தன் நிறத்தைப் பாலுக்குக் கொடுத்தது போலாம் என உவமித்துக் கூறலின் உவமையுமாயிற்று . எனவே இது அதிசயவுவமையாயிற்று .

4. விரோத வுவமை

எ-டு : 'செம்மை மரைமலருந் திங்களும் நும்முகமும்
தம்மிற் பகைவிளைக்குந் தன்மையவே - எம்முடைய
வைப்பாகுஞ் சென்னி வளம்புகார் போலினியீர் !
ஒப்பாகும் என்பா ருளர் '

(இ-ள்) எமது தனமாகிய சோழனது வளவிய புகார்போன்ற இனிமையையுடையீர் ! சிவந்த தாமரைமலரும் , மதியமும், நுமது முகமும் தம்முள்ளே பகை பெருக்குந் தன்மையாயிருக்க , இவற்றை உவமைக்குப் பொருந்தும் என்பாரும் உளர் ; இதற்குக் காரணஞ் சொல்லுவீராமின் எ-று .