பக்கம் எண் :
 
56தண்டியலங்காரம்

வி-ரை: 'மாறுபடு சொற்பொருள் மாறுபாட் டியற்கை , விளைவுதரவுரைப்பது விரோத மாகும் ' என்பது விரோத அணியின் இலக்கணமாகும் . இவ்வகையால் இப்பாடல் , பொருள் விரோதமாகும் .

தாமரை மலருங்கால் சந்திரன் ஒளி கெடுதலும் , சந்திரன் ஒளிதருங்கால் தாமரை குவிதலும் , முகம் மலர்ந்து ஒளி தரும்பொழுது இவ்விரண்டும் ஒருங்கு ஒளிகெடுதலும் விரோதமாம் . எனினும் முகத்திற்குத் தாமரை மதியம் ஆகிய இரண்டையுமே ஒப்பாகக் கூறுவர் என்பதால் உவமையுமாயிற்று .

தாமரை பகலில் மலருதல்பற்றி அப்பொழுது சந்திரன் ஒளிகெடும் என்றார் .

5. ஒப்புமைக் கூட்டவுவமை

எ-டு : 'விண்ணின்மேற் காவல் புரிந்துறங்கான் விண்ணவர்கோன்
மண்ணின்மே லன்னை வயவேந்தே ! - தண்ணளியில்
சேரா வவுணர் குலங்களையுந் தேவர்கோன்
நேரார்மேல் அத்தகையை நீ '

(இ-ள்) விண்ணின்மேல் உண்டாகிய உலகத்தைக் காக்குந்தொழிலின் மிக்கு உறங்கானாயினான் , தேவர்கட்குத் தலைவனாகிய இந்திரன் ; மண்ணின் மேல் உண்டாகிய உயிர்களைக் காக்கவேண்டி , வலியையுடைய வேந்தனே ! நீயும் உறங்காயாயினாய் ; உள்ளங் குளிர்ந்து பிறரைக் காக்குந் தன்மையிற் சேராத அசுரர் குலங்களைக் களையாநிற்கும் இந்திரன் ; பகைவரிடத்திலே நீயும் அத்தன்மையை எ-று .

புரிதல் - மிகுதல் .

வி-ரை: ஒப்புமையுடைய இருபொருளைக் கூட்டி அவ்விரண்டிற்கும் ஒப்புமை தோன்றச் சொல்லப்படுவது இவ்வணியின் இலக்கணமாகும் . 79 - ஆம் நூற்பாவில் இதன் இலக்கணத்தைக் காண்க .

இப்பாடலில் காத்தற்றொழிற்கு ஒப்புமையுடையவராகக் கூட்டிச் சொல்லப்பட்டவர்கள் இந்திரனும் சோழனும் ஆவர் . இவர்கள் இருவரும் காத்தலிலும் , பகைத்திறங் களைதலிலும் ஒத்து விளங்கியமை கூறப்படுதலின் ஒப்புமைக் கூட்டமாயிற்று . சோழனுக்கு இந்திரனை உவமை கூறுதலின் உவமையுமாயிற்று .

6. தற்குறிப்பேற்ற வுவமை

எ-டு : 'உண்ணீர்மை தாங்கி யுயர்ந்த நெறியொழுகி
வெண்ணீர்மை நீங்கி விளங்குமால் - தண்ணீர்த்
தரம்போலு மென்னத் தருகடம்பை மாறன்
கரம்போற் கொடைபொழிவான் கார் '

(இ-ள்) முதுவேனிற் காலத்தில் தடத்திலுண்டாகிய குளிர்ந்த நீர்போலச் சேர்ந்தோர் யாவர்க்கும் வருத்தம் நீங்கக் கொடுக்க வல்ல கடம்பையென்னும் பதியிலுண்டாகிய மாறன் என்னும் இயற்பெயரை உடையவனது கரம்போலக் கொடுப்பான் நினைந்து , மேகமானதும் , உள்ளே நீரையுடைத்தாய் உயர்ந்த வானெறியே நடந்து வெளுத்த தன்மையை நீங்கி விளங்காநின்றது எ-று