இவன் கையும் , பிறர்க்கு நீர்பெய்து கொடுக்குந் தொழிலானே நீர் புலராது உலகத்தார் கைகளுக்கு மேலாகப் பயின்று சிவந்த தன்மையை யுடைத்தாய் விளங்குதல் கண்டு கொள்க . தண்ணீர்த் தரம்போலு மென்னத் தருங்கரம் எனக் கூட்டுக . இத்தொழில் கைக்கு ஏற்ற மென்க .
வி-ரை: இயல்பாக விளையும் தன்மையில் கவிஞன் தான் குறித்த கருத்தை ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப் பேற்றமாம் . இதன் இலக்கணத்தை 55 - ஆம் நூற்பாவில் காண்க .
மேகம் மழை பொழியுங்கால் தன்னுள்ளே நீரையுடைத்தாயிருத்தலும் , வானத்திலிருத்தலும் , வெண்ணிறம் நீங்கி விளங்குதலும் இயல்பு . இங்ஙனம் இயல்பாக இருப்பதை மாறன் கைபோல இருந்து கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் அம்முத்திறங்களையும் பெற்றிருந்தது எனக்கூறல் தற்குறிப்பேற்றமாம் . மேகத்திற்குக் கையை உவமை கூறினமையின் உவமையுமாயிற்று . எனவே இது தற்குறிப்பேற்ற வுவமையாயிற்று .
7. விலக்குவமை
எ-டு : ' குழைபொருது நீண்டு குமிழ்மேன் முறியா
உழைபொருதென் லுள்ளங் கவரா - மழைபோல்
தருநெடுங்கைச் சென்னி தமிழ்நா டனையார்
கருநெடுங்கண் போலுங் கயல் '
(இ-ள்) மழையைப் போலக் கொடுக்கவல்ல பெரிய கையினையுடைய சென்னியுடைய தமிழ்நாட்டையொப்பாருடைய கரிய நெடிய கண்போலும் கயலும் , சங்கொடு பொருது வளர்ந்து நீர்க்குமிழி மேலே மறிந்து தன்னிடத்திலே பொருதும் , என்னுள்ளத்தைக் கவரமாட்டா என்ற இதனானே ; கண்ணும் காதிலுண்டாகிய குழையோடு சேர்ந்து வளர்ந்து குமிழுக்கு மீதே தாவுவது போன்று மானின் விழியோடு பகைத்து என்னுள்ளத்தைக் கவருமென நின்றவாறு காண்க .
கயல்மேற் செல்லுங்கால் : குழை - சங்கு , குமிழ் - நீர்க்குமிழி , உழை - பக்கம் எனவும் ; கண்மேற் செல்லுங்கால் : குழை - மகரக்குழை , குமிழ் - மூக்கு , உழை - மான் எனவும் நீள்தல் - வளர்தல் , கவர்தல் - கொள்ளுதல் , மறிதல் - தாவுதல் , பொருதல் - பகைத்தல் , சென்னி - சோழன் , தமிழ்நாடு சோணாடு எனவும் வரும் .
வி-ரை: ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து அவற்றிற்குள்ள ஒப்புமையை முன்னர்க்கூறிப் பின்பு , யாதானுமொரு செயற்றிறனால் அப்பொருளொடு உவமை ஒவ்வாது என விலக்கிக் கூறின் அது விலக்குவமையாம் .
இப்பாடலில் கயலைக் கண்ணிற்கு உவமித்து அவற்றிற்குள்ள ஒப்புமையை முன்னர்க்கூறிப் பின்பு , உள்ளங் கவராத தன்மையால் கண்ணினைக் கயல் ஒவ்வாது என விலக்கினமையின் விலக்குவமை யாயிற்று.
இங்குக் கூறப்பட்ட விலக்கு , முன்னவிலக்கு என்னும் அணியே யாகும் . இதன் இலக்கணத்தை 42 - ஆம் நூற்பாவில் காண்க .