பக்கம் எண் :
 
60தண்டியலங்காரம்

எ-டு: 'நாட்டந் தடுமாறச் செவ்வாய் நலந்திகழ
தீட்டரிய பாவை திருமுகம் --காட்டுமால்
கெண்டைமீ தாட நறுஞ்சே யிதழ்கிளர
வண்டுசூழ் செந்தா மரை'

இ-ள்: மீதே கண்தடுமாறி யுலாவச், சிவந்த வாய் அழகெறிப்ப, எழுதுதற்கரிய உருவையுடைய பாவை போன்றாள் திருமுகத்தை யொவ்வா நின்றது; மீதே கெண்டை யுலாவ, நறுநாற்றத்தையுடைத்தாய்ச் சிவந்த இதழ் விளங்க, வண்டாற் சூழப்பட்ட சிவந்த தாமரை எ-று.

தீட்டரிய பாவை --கொல்லியம் பாவை. காட்டும்-- ஒக்கும்.

இதனுள் பொருளாகிய தாமரைக்கண் வண்டொழுங்கிற்கு ஏற்பதோர் உவமை, உவமையாகிய முகத்துக்கண் தோன்றப் புணர்த்தலில்லாமையின், உவமேய அடைக்கு உவமான அடை குறைந்து குற்றமாயிற்று.

வி-ரை:இதன்கண் முகம் உவமையாகவும், தாமரை பொருளாகவும் கூறப்பட்டுள்ளது. உவமையாகிய முகத்திற்கு நாட்டந் தடுமாறல், செவ்வாய் நலந்திகழல் ஆகிய இருஅடைமொழிகளும், பொருளாகிய தாமரைக்குக் கெண்டை மீதாடல், நறுஞ்சேய் இதழ் கிளரல், வண்டு சூழ்தல் ஆகிய மூன்று அடைமொழிகளும் கூறப்பட்டிருத்தலின் குறைதற்கு எடுத்துக் காட்டாயிற்று. குறைதல் -- பொருளடையினும் உவமையடை குறைதல்.

தாழ்தலும் உயர்தலும் பால்மாறுபடுதலும்

எ-டு: 'மன்னவர்க்கு நாய்போல் வனப்புடையர் வாள்வயவர்
மின்மினியும் வெஞ்சுடரோன் போல்விளங்கும் --அன்னப்
பெடைபோலுஞ் சந்திரன் பைந்தடங்கள் போலும்
மிடைமாசொன் றில்லா விசும்பு'

இ-ள்: வேந்தரிடை நாயிடத்துண்டாகிய நற்செய்தியைச் செய்தலால், வாளினையுடைய வலியோர் நாயை யொப்பர்; மின்மினியும், வெய்ய சுடரோனைப் போல் விளங்கும் ; அன்னப் பெடையை யொக்கும், மதியம்; பசிய தடாகங்கள் போலும், செறிந்திருக்கப்பட்ட மாசில்லாத ஆகாயம் எ-று.

இதனுள், 'மன்னவர்க்கு நாய்போல் வனப்புடையர் வாள் வயவர்' என்புழி, இறப்ப இழித்து இன்னாதாகப் புணர்க்கப்பட்டது உவமை.

'மின்மினியும் வெஞ்சுடரோன்போல் விளங்கும்' என்புழி, மின்மினிக்கு நிகராக்கலாகாத வெஞ்சுடரோனை யுவமிக்க உவமை வழுவாயிற்று.

'அன்னப்பெடை போலுஞ் சந்திரன் ' என்புழி, ஆண்பாற்குப் பெண்பால் உவமையாய்க் குற்றமாயிற்று.

'பைந்தடங்கள் போலும் மிடைமாசொன்றில்லா விசும்பு ' என்புழி, ஒருமைப் பாலுக்குப் பன்மைப் பாலை உவமை காட்ட வழுவாயிற்று. பிறவுமன்ன,