இனி; வழுவின்றி வருஞ்செய்யுனை வந்துழிக் காண்க, மிகுதல், குறைதல், தாழ்தல், உயர்தல், பால் மாறுபடுதல் முதலியன குற்றமேனும், குணம் மிக்குழிக் கொள்க.
வி-ரை:வீரர்களுக்கு நாயை உவமை கூறியது தாழ்தல் பற்றிய உவமையாம். உயர்தல்--பொருளுக்குக் கூறப்பட்ட உவமை மிகவும் தாழ்ந்ததா யிருத்தல்.
ஏனையிரண்டும் வெளிப்படை.
(எ)
உவமவுருபுகள்
34. போல மானப் புரையப் பொருவ
நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப
ஏர ஏய மலைய இயைய
ஒப்ப எள்ள வுறழ ஏற்ப
அன்ன அனைய அமர வாங்க
என்ன இகல இழைய எதிரத்
துணைதூக்(கு) ஆண்(டு) ஆங்கு மிகுதகை வீழ
இணைசிவண் கேழ்,அற்றுச் செத்தொடு பிறவும்
நவைதீர் பான்மை யுவமைச் சொல்லே.
எ-ன், இடைநிற்கும் உவமைச் சொற்களை உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: போல முதல் செத்து ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்தைந்தும், இவை போல்வன பிறவும் குற்றமற்ற பாகுபாடுடைய உவமைச் சொல்லாம் எ-று.
1 'பாகுபாடு ' என்பது, போல என்று சொல்லப்பட்ட சொல் 'புலிபோல் மறவன்', 'புலிபோல் வந்தனன்' என இடைச்சொல் வாய்பாட்டாற் பொதுவாய் நிற்கும்; அல்லது 'புலிபோலும் மறவன் ' எனப் பெயரெச்ச வாய்பாட்டாற் பெயர்கொண்டும், 'புலிபோல வந்தான்' என வினையெச்ச வாய்பாட்டால் வினைகொண்டும் நிற்கும் என்பது. பிறவுமன்ன.
'பிறவும் ' என்றதனால், நாட, நக, நடுங்க, நந்த, கள்ள, கருத, காட்ட, மிளிர, ஏய்ப்ப, மருள எனபன முதலியுனவுங் கொள்க.
இவற்றுள், தொக்கும், விரிந்தும், தொகாதே விரிந்தும் நிற்பனவெல்லாம் கண்டு கொள்க.
(8)
3. உருவகவணி
35. உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித்(து)
ஒன்றென மாட்டின்அஃ துருவக மாகும்.
1. 'பாகுபாடுடைய' என்றதனால், போல என்பது புலிபோலும் மறவன் எனப் பெயரெச்சமாயும், புலிபோல வந்தான் என வினையெச்சமாயும் வரும்; பிறவுமன்ன' என்பதும் பாடம்.