'தடக்கைப் பொருப்பு ' என்றது விநாயகரை , தேனக்கலர் - வண்டுமலர் எனினும் அமையும் .
வி-ரை: விநாயகப் பெருமான் அணிந்திருக்கும் கொன்றை மலர் , அவர்தம் சடை , மதம் , மருப்பு ஆகிய பொருள்களை முறையே , தம்மில் இயைபற்ற பொருள்களான பொன் , பவளக்கொடி , மழை , மதியாக உருவகிக்கப்பட்டுள்ளமையின் இது இயைபில் உருவகமாயிற்று .
இயைபுருவகத்தில் உருவகம் , பொருள் ஆகிய இரண்டுமே தம்மில் இயைபுடையனவாயின . இதன்கண் பொருள் தம்முள் இயைபுடையனவாயும் , உருவகிக்கப்பட்ட பொருள்கள் மட்டும் தம்முள் இயைபற்றனவாயும் உள்ளன .
(6) வியநிலையுருவகம் என்பது ஒன்றன் அங்கம் பலவற்றினுள் சிலவற்றை உருவகஞ் செய்தும் , சிலவற்றை உருவகஞ் செய்யாதும் உரைத்து , அங்கியை உருவகஞ் செய்து உரைப்பது .
எ-டு : ' செவ்வாய் நகையரும்பச் செங்கைத் தளிர்விளங்க
1மைவாள் நெடுங்கண் மதர்த்துலவச் - செவ்வி
நறவலருஞ் சோலைவாய் நின்றதே நண்பா !
குறவர் மடமகளாங் கொம்பு '
(இ-ள்) சிவந்தவாய் எயிற்றை யரும்பச் , செங்கரங்கள் தளிரை விளக்க , வருத்தஞ் செய்யும் வாளாகிய கண்கள் சிவந்த அரியோடு உலாவப் , புதிதாகிய தேனை யுடைத்தாய் மலருஞ் சோலையின்கண்ணே தோன்றிற்று ; நண்பனே ! குறவர்க்கு மடப்பத்துடனே கூடிய மகளாந் தன்மை யுடைத்தாயிருப்பதொரு வஞ்சிக்கொம்பு எ-று .
மை - குற்றம் ; அஞ்சனமுமாம் . மதர்த்தல் - அரிபரத்தல் . செவ்வி - புதுமை .
வி-ரை: இப்பாடலில் கூறப்பட்ட பொருள் குறவர் மடமகள் . இப்பெண்ணின் உறுப்புக்களில் இங்குக் கூறப்படுவன வாய் , கை , கண் ஆகிய மூன்றுமாம் . இவற்றுள் கையை மட்டும் தளிராக உருவகஞ் செய்து , ஏனைய உறுப்புக்களை உருவகிக்காதும் , உறுப்பினையுடைய பெண்ணை (அங்கியை) மட்டும் கொம்பாக உருவகித்தும் இருத்தலின் இது வியநிலை யுருவகமாயிற்று .
(7) சிறப்புருவகம் என்பது ஒரு பொருளை எடுத்து அதற்குச் சிறந்த அடைகளை உருவகஞ் செய்து அவற்றானே உருவகமாக்கி யுரைப்பது .
எ-டு : ' விரிகடல்சூழ் மேதினி நான்முகன்மீ கானாச்
சுரநதிபா யுச்சி தொடுத்த - அரிதிருத்தாள்
கூம்பாக எப்பொருளுங் கொண்டபெரு நாவாய்
ஆம்பொலிவிற் றாயினதால் 2இன்று '
(இ-ள்) பரந்த கடல்சூழ்ந்த உலகமானது , நான்முகத்தோன் மீகாமனாகவும் , தேவகங்கை பாயாகவும் , அப்பாயையுச்சியிலே உடைத்தாகிய திருமால் மேனோக்கி யெடுத்த சீர்பாதம் கூம்பாகவும் , பல வகைப்பட்ட
1. 'மைவார்' என்பதும் பாடம் .
2. 'அன்று' என்பதும் பாடம் .