பக்கம் எண் :
 
66தண்டியலங்காரம்

பொருள்களையும் உடைத்தாய்ப் பெரிதாகிய அழகோடு கூடிய நாவாய் ஆனது எ-று .

இதனுள் நான்முகன் மீகாமனாகவும் , சுரநதி பாயாகவும் , அரிதிருத்தாள் கூம்பாகவும் உருவகஞ் செய்யப் புவி நாவாய் ஆயினமையின் , அப்பெயர்த்தாயிற்று .

'பாயை உச்சியிலே உடைத்தாகிய தாள்' எனக் கூட்டுக . உலகமானது இவ்வுறுப்புக்களை யுடைமையின் மரக்கலம் ஆயிற்றெனக் கொள்க . தொடுத்தல் - கட்டல் . ஆல் - அசை .

(8) விரூபகவுருவகம் என்பது ஒரு பொருட்குக் கூடாத தன்மை பலவுங்கூட்டி உருவகஞ் செய்வது.

எ-டு : ' தண்மதிக்குத் தோலாது தாழ்தடத்து வைகாது
முண்மருவுந் தாண்மேன் முகிழாது - நண்ணி
இருபொழுதுஞ் செவ்வி இயல்பாய் மலரும்
அரிவை வதனாம் புயம் '

(இ-ள்) தட்பத்தினையுடைய மதியின் தொழிற்குக் கெடாது , ஆழ்ந்த கயத்தில் தங்காது , முள்னை 'யுடைத்தாகிய தாளின்மீது மொட்டியாது , காலையும் மாலையுஞ் சேர்ந்து செவ்வியை யுடைத்தாய் மலர்ந்து நிற்கும் , என் காதலியுடைய முகமாகிய தாமரை' எ-று .

மதிக்கு அழிதலும் , தடத்து வைகுதலும் , அடியில் முள்ளுடைத்தாதலும் , மொட்டித்தலும் தாமரைக்கு உளவெனக் கொள்க .

வி-ரை: மதிக்குத் தோலாமை , தடத்துள் வைகாமை , முள்தாளின் மீது முகிழாமை , இருபொழுதும் மலர்தல் ஆகிய இவை தாமரைக்குக்கூடாத தன்மைகளாம் . இத்தன்மைகளை அதற்கு ஏற்றி , அத்தகைய தாமரையாக முகத்தை உருவகம் செய்தமையின் , இது விரூபகவுருவக மாயிற்று .

(9) சமாதானவுருவகம் என்பது ஒருபொருளை நன்றாக உருவுகஞ் செய்து , அதனையே தீங்கு தருவதாகக் கூறி , அத்தீங்கும் அதனானே வருகின்றது அன்றென்று அதற்குப் பிறிதோர் காரணங் கூறுவது .

எ-டு : ' கைகாந்தள் வாய்குமுதங் கண்நெய்தல் காரிகையீர் !
மெய்வார் தளிர்கொங்கை மென்கோங்கம் - இவ்வனைத்தும்
வன்மைசேர்ந் தாவி வருத்துவது மாதவமொன்(று)
இன்மையே யன்றோ எமக்கு '

(இ-ள்) அழகினையுடையீர் ! உம்முடைய காந்தள் மலராகிய கையும் , குமுதமாகிய வாயும் , நெய்தல் மலராகிய கண்ணும் , நீண்ட தளிராகிய மெய்யும் , மென்மையுடைய கோங்கரும்பாகிய கொங்கையும் என்று சொல்லப்பட்டன நும்முடைய அவயவமாகிலும் , அவை யனைத்துந் தன்மை திரிந்து வன்கண்மையைச் சேர்ந்து எம்முடைய உயிரை வருத்தஞ் செய்யும் ; இது , முற் காலத்தில் யாஞ்செய்த தீவினைப்பயன் இக்காலத்து எமக்குப் பயத்தலாலன்றோ ? நும்மேல் தவறுண்டோ ? எ-று .

கொங்கைக்கு அடையாகிய மென்மையைத் தீவகமாக்கிக் காந்தள் உள்ளிட்ட உறுப்புக்கள் அனைத்தினுங் கொள்க . தவம் - நல்வினை .