பொங்கு அளகம் - தழைத்த கூந்தல், மையரிக்கண்-அரி பரந்துமையுண்ட கண்.
இது உண்மைப் பொருளை மறுத்து ஒப்புமைப் பொருளை உடன்பட்டமையான், அப்பெயர்த்தாயிற்று.
வி-ரை:அவநுதி அணியோடு கூடிவரும் அவநுதியுருவக மாகும். ஒன்றைச் சிறப்பித்தற்காக உண்மையை மறுத்துப் பிறிதாக உரைப்பது அவநுதியாகும். இதன் இலக்கணத்தை 74-ஆம் நூற்பாவால் அறிக.
இப்பாடலில் ஒரு பெண்ணின் உறுப்புக்களைச் சிறப்பிக்கும் முகமாக அவளுடைய கூந்தல், கொங்கை, கண், கை ஆகிய உறுப்புக்களை அவ்வவ் வுறுப்புக்கள் அல்ல என மறுத்துப், பின்பு அவற்றை முறையே புயல், கோங் கரும்பு, வண்டு, காந்தள் என உருவகித்துள்ளமையின் இது அவநுதி யுருவகமாயிற்று.
6. சிலேடையுருவகம்
எ-டு: 'உண்ணெகிழ்ந்த செவ்வித்தாய் பொற்றோட் டொளிவளரத்
தண்ணளிசூழ்ந் தின்பந் தரமலர்ந்து - கண்ணெகிழ்ந்து
காதல் கரையிறப்ப வாவி கடவாது
மாதர் வதனாம் புயம்.'
இ-ள்: உள்ளே விரியாநின்ற பொலிவினை யுடைத்தாய் அழகிய இதழ்களின் ஒளி மிகக்குளிர்ந்திருக்கின்ற வண்டுகளாற் சூழப்பட்டுக்கண்டார்க்கு இனிமை தோன்ற இதழ் விரிந்து மதுப்பொசிந்து கண்டார்க்கு ஆசை மிகுப்பப் பொய்கை யிடத்து நீங்காது தோன்றிய தாமரை என்றும்;உள்ளக் கசிவால் 1 மலர்ந்த புதுமை யுடைத்தாய்ப், பொன்னான் இயன்ற தோடுகளின் ஒளி தழைப்பக் குளிர்ந்த விருப்பத்தை மேவிக், கண்டார்க்கு ஆசையளிக்குந தோற்றரவினை யுடைத்தாய்க் கண்ணினையும் உடைத்தாய், ஆசைப்பாட்டெல்லை கடப்ப,உள்ளங்கடவாது இவளுடைய வதனமாதிய தாமரை என்றும் வந்தவாறு காண்க.
இது தாமரைக்கும் முகத்திற்கும் சிலேடை. இதனுள் தாமரையொழுக்கத்தையும் முகவொழுக்கத்தையும் ஒரு சொற்றொடர்பால் சிலேடித்து வதனாம்புயம் என்று உருவகஞ் செய்தவாறு கண்டு கொள்க.
தாமரைமேற் செல்லுங்கால்: உள்-தாமரையுள், நெகிழ்தல்-விரிதல். செவ்வி-பொலிவு, பொன்-அழகு, தோடு-இதழ், தண்-குளிர்ச்சி, அளி-வண்டு, இன்பம்-இனிமை, தர-தோன்ற, கள்-மது, நெகிழ்தல்-விரிதல், வாவி-பொய்கை எனவும்; முகத்தின்மேற் செல்லுங்கால்: உள்-மனம், நெகிழ்தல்-பொசிதல், செவ்வி-புதுமை, பொற்றோடு-பொன்னின்தோடு, அளி-விருப்பம், இன்பம்-ஆசை, தர-கொடுக்க, மலர்தல்-தோன்றல், கண்-விழி, நெகிழ்தல்-உண்டாதல், காதல்-ஆசை, ஆவி-உயிர் எனவும் வரும்.
வி-ரை:சிலேடை அணியோடு கூடிவரும் உருவகம் சிலேடையுருவக மாகும். இப் பாடலில் ஒரு பெண்ணின் முகத்திற்கும், தாமரைக்கும் பொருந்துவதான சொற்றொடர்களை முன்னே அமைத்துக் கூறிப் பின்பு அம்.
1. 'வந்த' என்பதும் பாடம்.