முகத்தை தாமரையாக உருவகித்துக் கூறப்பட்டுள்ளமையின் இது சிலேடை யுருவகமாயிற்று.
உவமை உருவகங்கட்குப் புறனடை
38. உருவகம் உவமை யெனஇரு' திறத்தவும்
நிரம்ப வுணர்த்தும் வரம்புதமக் கின்மையிற்
கூறிய நெறியின் வேறுபட வருபவை
தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே.
எ-ன், மேற்சொல்லிய உருவகம் உவமை என்னும் இரண்டு திறத்து அலங்காரங்களுக்கும் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: உருவகமும் உவமையும் என்னும் இரண்டுதிறத்து அலங்காரங்களும், ஒழிவின்றி யுணர்த்தும் வரையறை யுடையவல்ல வாகலால், சொல்லப்பட்ட நெறியின் வேறுபட வருபவை யறிந்து அவற்றின்பால் சார்த்திக்கோடல் அறிவுடையோர் கடன் எ-று.
ஈண்டு உருவகம் முற்கூறியது, அதிகாரம் இடையறாமல் எனக்கொள்க. அவற்றுள் சில உருவகம் வருமாறு:-
1. ஏதுவுருவகம்
எ-டு: 'வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.'
-குறள்.872
வி-ரை:இ-ள்: வில்லை ஏராகவுடைய வீரர்களோடு பகைமை கொள்ளினும், நீதி நூல்களை ஏராகவுடைய அறிஞர்களோடு பகை கொள்ளற்க என்பதாம்.
'வீரம், சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே யுடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும் தனக்கேயாம்; ஏனைச் சூழ்ச்சி யுடையாரோடாயின் தன்வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையால் அதுவும் ஆகாமை பெறுதும். இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை
சொல்லவேண்டாவாயிற்று. உருவக விசேடம்.' (பரிமேல்-உரை)
இப்பாடலில் வீரர், அறிஞர் ஆகிய இருவர்களையும் உழவராக உருவகித்ததுடன், அதற்குரிய காரணங்களையும் உடன் தந்துள்ளமையின், இது ஏது உருவகமாயிற்று.
இவ்வுருவகம் முதலாக இந்நூற்பாவில் கூறப்படுவன வெல்லாம் முன்பு கூறிய அணிகளினும் சிறிது வேறுபட வந்தனவாகும். ஆதலின் அவ்வேற்றுமை அறிதல் இன்றியமையாததாகும்.
முன்பு கூறிய ஏது உருவகத்திற்கும் (பக்.70) இதற்கும் வேற்றுமை ஆங்குக் கூறப்பட்டதில் உருவகிக்கப்பட்ட பொருள், உருவகப் பொருள், ஏது ஆகிய மூன்றும் வெளிப்படையாகத் தெரிகின்றது. ஈங்கு உருவகப் பொருளும் ஏதுவுமேயன்றி, உருவகிக்கப்பட்ட பொருள் இன்னதெனத் தெற்றெனத் தெரியுமாறில்லை. எனவே இது குறிப்பும், அது வெளிப்படை
யாயும் உள்ள வேற்றுமை என்பது பெறப்பட்டது.