2. இயைபுருவகம்
எ-டு: 'ஏரி யிரண்டும் சிறகா எயில்வயிறாக்
காருடைய பீலி கடிகாவா - நீர்வண்ணன்
அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு.'
எயில் - மதில். கடி - புதுமை. கா - சோலை. அணி - அழகு.
வி-ரை, இ-ள்: இரு, பக்கத்திலுமுள்ள ஏரிகள் சிறகுகளாகவும், இடையிலுள்ள மதில் வயிறாகவும், சுற்றிலுமுள்ள நறுமணம் வீசும் சோலைகள் கருமை நிறம் பொருந்திய தோகைகளாகவும்,திருமாலினது திருவத்தியூர் வாயாகவும் கொண்டிலங்கும் சிறப்பால், அழகிய தோள்களையுடைய சோழனுடைய காஞ்சீபுரமானது அழகிய மயிலை யொத்து
விளங்குகின்றது என்பதாம்.
இதன்கண் காஞ்சியிலுள்ள ஏரி, மதில், சோலை, அத்தியூர் ஆகியவைகளை முறையே சிறகு, வயிறு, தோகை, வாய் ஆகவும், காஞ்சியை மயிலாகவும் தம்முள் இயைபுடையனவாக உருவகம் செய்யப்பட்டுள்ள மையின் இது இயைபுருவகமாயிற்று.
வேறுபாடு
| இங்குக் கூறப்பட்ட இயைபுருவகம் | | முன்னர்க் கூறப்பட்ட இயைபுருவகம் |
1 | மயிலாக உருவகம்செய்யப்பட்ட வற்றால், ஒன்றினொன்று பிரிக்க இயலாதவாறு நெருங்கியதாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. | | தளிர், அரும்பு,மலர்,வண்டுகளாக உருவகம் செய்தவாற்றால் ஒன்றுஒன்ற னோடு பிரிக்க இயன்றதாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. (அரும்பினின்றும் மலரைப் பிரிக்க இயலாதெனினும் தன்மை வேறுபாடு அறிக.) |
2 | உறுப்புக்களையே யன்றி, உறுப் புக்களையுடைய காஞ்சீபுரமும் உருவகம் செய்யப்பட்டள்ளது. | | உறுப்புக்களை மட்டும் உருவகித்து அவற்றை யுடைய முகத்தை உருவகம் செய்யப்பட்டிலது. |
3 | ஆகிய என்னும் உருபுகள் விரிந்துள்ளன. | | ஆகிய என்னும் உருபுகள் தொக்குள்ளன. |
3. விலக்குருவகம்
எ-டு: 'மலையிற் பயிலா மடமஞ்ஞை வாரி
அலையிற் பிறவா வமுதம் - விலையிட்(டு)
அளவாத நித்திலம் ஆராத தேறல்
வளவாண் மதர் நெடுங்கண் மான்.'
பயிறல் - தங்குதல். வாரியலை - கடல். அளத்தல் - நிறுத்தல். ஆர்தல் உண்டல். தேறல் - மது. வளவாள் - வளப்பத்தையுடைய வாள்.
வி-ரை: விலக்கு அணியுடன் உருவகம் செய்யப்படுவது விலக்கு உருவகமாம்.