பக்கம் எண் :
 
78தண்டியலங்காரம்

இ-ள்: முத்தைக்கோத்தது போன்றது இவளது எயிறு; அவ்வெயிற்றை யொத்த அரும்புடைய முல்லைக்கொடி போன்றது மருங்குல்; அம்மருங்குலாகிய கொடிமீதே மின்னத்தோற்றிய கார் போன்றது நறுநாற்றத்தை யுடைய கூந்தல்; இத்தன்மைத்தாகிய மெல்லிய சாயலாளிடத்து உண்டாகிய அன்பிற்குத் தரமுண்டோ? எ-று.

வி-ரை: உவமை கொடுத்துக் கூறப்பட்ட பொருளைப் பின்னும் பிறிதொன்றற்கு உவமையாக்கி யுரைப்பது ஒப்புவமை யாயிற்று.

முத்துக் கோத்தன்ன முறுவல் என உவமை கொடுத்துக் கூறப்பட்ட பொருளைப் பின்பு, அம்முறுவலை ஒத்த அரும்பு என உவமையாக்கிக் கூறியுள்ளமையின் இது ஒப்புவமை யாயிற்று.

5. சந்தானவுவமை

எ-டு; '1ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கு குறங்கென
மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த வோதி யோதியின்
நளிச்சினை வேங்கை நாண்மலர் நாண்மலர்க்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கு சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கின் அவிர்முகை முகையெனப்
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
வண்டோட்டுப் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன்செறி நீர்தரு மெயிற்றின்' -சிறுபாண் ; 19-28

இதனை 'மாலையுவமை' எனினும் அமையும்.

வி-ரை: ஒன்றோடொன்று தொடர்புடைய பல பொருள்களை ஒவ்வொரு பொருளுக்கும் உவமையாக்கி யுரைப்பது சந்தான வுவமையாம். இங்ஙனம் வரும் உவமையும் பொருள்களும் ஒன்றற்கொன்று தொடர்புடை யனவாக மாலைபோல் நிற்றலின், இதனை மாலையுவமை யென்றும் கூறுவர்.

இ-ள்: இழுக்கப்பட்டு நிலத்திலே பொருந்தப் பெற்ற பெரிய பெண் யானையினது நீண்ட துதிக்கைபோலத் திரண்டு உருண்டு ஒன்றொடொன்று நெருங்கியுள்ள தொடைகளையும்,அந்தத் தொடைகளைப் போலப் பெரிய மலையிடத்து வரிசையாகப் பொருந்திய வாழை மரங்கள், அவற்றின் பூவைப் போல அழகுற வமைந்த தலைமுடியினையும், அம்மயிர் முடியைப்போலக் கரிய நிறம் உடையதாய்த் தண்ணிதாகச் செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் புதிய மலர், அம்மலர் என்று கருதி மகிழ்ந்த வண்டுகள் மொய்க்கின்ற தேமலையும்; அத்தேமல் பொறியாக பரந்தாற்போலப் புதிதாகப் பூத்தலை யுடைய கோங்கமரத்தின் அழகிய அரும்புகள், அவ்வரும்புகளைப் போன்ற அணியணிந்த முலைகளையும், பெரிய மடல்களையுடைய பனைமரம் அந்த முலைபோல வளர்த்த நுங்குபோல இனிமை பொருந்திய நீரைத்தரும் பற்களையும் (உடைய மகளிர்) என்பதாம்.


1. இச்சிறுபாணாற்றுப்படை.அடிகள் நச்சினார்க்கினியர் உரைக்கு மாறாகப் பல பாடபேதங்களுடன் ஈண்டுக் காணப்படுகின்றன.