இதன் கண் யானையின் துதிக்கையை முதலும், எயிற்றை யிறுதியாகவும் வைத்து ஒன்றொடொன்று தொடர்புடையனவாக உவமை செய்திருத்தலின் இது சந்தானவுவமை யாயிற்று.
முன்னர்க் கூறிய மாலையுவமைக்கும் (பக்-51) இதற்கும் உள்ள வேறுபாடு;- முன்னர் ஒன்றொடொன்று தொடர்புடைய பல பொருள்களை ஒரு பொருளுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. ஈண்டு ஒன்றொடொன்று தொடர்புடைய பல பொருள்களை வெவ்வேறு பொருள்களுக்கு உவமையாக்கிக் கூறப்பட்டுள்ளது.
6. விலக்குவமை
எ-டு; 'பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனும் அல்லன்
மாரியும் உண்டீண் டுலகு புரப்பதுவே -புறம்-107
வி-ரை: முன்னர்ப் பொருளைக் கூறிப் பின்பு உவமையைக் கூறுங்கால், குறிப்பாக முன்னர்க் கூறிய பொருளுக்குப் பின்னர்க் கூறிய உவமையை உவமையாகக் கூறுதல் தக்கதன்று என இழிவு தோன்றுமாறு செய்து விலக்குவது விலக்குவமையாம்.
இ-ள்: பாரி பாரி என்று பலகாலும் அவனுடைய புகழ்களைப் பாராட்டி அவ்வொருவனுடைய கொடைத் தன்மையையே பல புலவர்களும் பாராட்டுவார்கள்; ஆனால் அங்ஙனம் இவ்வுலகினைக் காத்தற்குப் பாரி ஒருவன் மட்டுமல்லன், மழையும் உண்டு என்பதாம்.
இப்பாடலில் கூறப்பட்ட பொருள் பாரி. அவனுக்கு மேகம் உவமை யாகாது என நேரிதாக கூறி விலக்காமல், மாரியும் உண்டு என்னும் இழிவுசிறப்பாக வந்த குறிப்பினால் அவனுக்கு அது உவமையாதல் தக்கதன்று என விலக்கப்பட்டமையின் இது விலக்குவமை யாயிற்று.
இங்ஙனம் பிறவும் வருவனவற்றை உவமையின்பாற் சார்த்தியுணர்க.
உருவகமும், உவமையும் ஓரினமாக்கிப் புணர்த்தமையால் உருவகத்திற்கு ஓதிய இலக்கணம் உவமைக்கு ஆதலும், உவமைக்கு ஓதிய இலக்கணம் உருவகத்திற்கு ஆதலும் உள; அவை வருமாரு அறிந்து கொள்க. (12)
4. தீவகவணி
39 குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல்
ஒருவயின் 1நின்றும் பலவயின் பொருள்தரின்
2தீவகஞ் செய்யுள் மூவிடத் தியலும்.
எ-ன், நிறுத்த முறையானே தீவகமென்னும் அலங்காரம் உணர்த்துதல் நூதலிற்று.
இ-ள்:குணத்தானும், தொழிலானும், சாதியானும் பொருளானும் குறித்து ஒருசொல் ஓரிடத்து நின்று, செய்யுளிற் பலவிடத்து நின்ற
1. 'நின்ற' என்பதும் பாடம்.
2. இதனையடுத்துச் சில பிரதிகளில் 'மூவிடமாவன முதலிடை கடையே' என்றொரு நூற்பாவும் காணப்படுகிறது.