பக்கம் எண் :
 
86தண்டியலங்காரம்

3. ஒருபொருள் தீவகம்

எ-டு : ' வியன்ஞாலஞ் சூழ்திசைகள் எல்லாம் விழுங்கும்
அயலாந் துணைநீத் தகன்றார் - உயிர்பருகும்
விண்கவரும் வேரிப் பொழில்புதைக்கு மென்மயில்கள்
கண்கவரும் மீதெழுந்த கார் '

இ-ள்: அகன்ற உலகத்தைச் சூழ்ந்த திக்குகள் எல்லாவற்றையும் தன்னிடத்து அடக்கும் ; துணையைப் பிரிந்து அயலவர் போலப் போயினார் உயிரை யுண்ணும் ; ஆகாயத்தை மறைக்கும் ; நறு நாற்றத்தையுடைய பொழிலை மூடும் ; மென்மையையுடைய மயில்களின் கண்களை வவ்விக்கொள்ளும் உயரவெழுந்த மேகம் எ-று .

வி-ரை: ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களுடன் ஒரு சொல் சென்றியைந்து பொருள் படுமாயின் அது ஒரு பொருள் தீவகமாம் .

இதன்கண் விழுங்கும் , பருகும் , கவரும் , புதைக்கும் என்பன மேகத்தின் மிகுதியாகிய ஒரு பொருளையே குறித்தலின் ஒரு பொருள் ஆயிற்று . அவ்வச் சொற்களுடனும் 'கார்' என்னும் சொல் சென்றியைந்து பொருள் தருதலின் தீவகமும் ஆயிற்று .

4. சிலேடா தீவகம்

எ-டு : ' மான்மருவி வாளரிகள் சேர்ந்து மருண்டுள்ளம்
தான்மறுக நீண்ட தகைமையவாம் - கான
வழியும் ஒருதனிநாம் வைத்தகலும் மாதர்
விழியுந் தருமால் மெலிவு '

இ-ள்: மான்கள் மருவி ஒளியையுடைய சிங்கங்கள் சேர்ந்து மயங்கிக் கண்டார் உள்ளம் வெருவும்படி நீண்ட தன்மையை யுடைத்தாய காட்டு நெறியும் , மயக்கம் மருவி ஒளியினையுடைய அரிகள் பரந்து கண்டார் உள்ளமானது மயங்கித் தடுமாறும்படி பெரிதாய நான் தனியிருத்திப் போந்த கிழத்தியுடைய கண்ணும் , நமக்கு வருத்தத்தைத் தராநின்றன எ-று .

இது வழிக்கும் விழிக்கும் சிலேடை , வழிமேற் செல்லுங்கால் : மான் - புள்ளிமான் , அரி - சிங்கம் , சேர்ந்து - திரண்டு , உள்ளம் - நெஞ்சு , மறுகல் - வெருவல் , தகைமை - தன்மை , கானம் - காடு எனவும் ; கண்ணின்மேற் செல்லுங்கால் : மால்மருவி - மயக்கம் மருவி , அரி - செவ்வரி , (மருண்டுள்ளம் தான்மறுக நீண்டதகைமைய - ஒரு தன்மை) எனவும் வரும்.

வி-ரை: சிலேடை அணியுடன் , தீவக அணி கூடிவரின் அது சிலேடா தீவகமாம் .

இதன்கண் அமைந்துள்ள சொற்றொடர்கள் விழிக்கும் வழிக்கும் இயைய இருத்தலின் சிலேடை ஆயிற்று . அவ்விரு சொற்களுடனும் 'மெலிவு ' என்னும் சொல் சென்றியைந்து பொருள் படுதலின் தீவகமும் ஆயிற்று .

'நால்வகையானும்' என்கிற முற்றும்மையை எச்சவுவமையாக்கிப் பிறவகையால் வருவனவும் உளவெனக் கொள்க . அவை வருமாறு : -