பக்கம் எண் :
 
பொருளணியியல்87

1. உவமா தீவகம்

எ-டு : ' முன்னங் குடைபோல் முடிநா யகமணிபோல்
மன்னுந் திலகம்போல் வாளிரவி - பொன்னகலம்
தங்கு கவுத்துவம்போல் உந்தித் தடமலர்போல்
அங்கண் உலகளந்தாற் காம் '

இ-ள்: அழகிய பெரிய உலகை அளந்த திருமாலுக்கு ஆதித்தன் முதலில் குடை போலும் , பின்பு முடியில் சூடிய நாயகமணி போலும், அதன்கீழ் உண்டாய நெற்றித்திலகம் போலும் , மார்பிலுள்ள கௌத்துவமாகிய மணிபோலும், கொப்பூழில் உண்டாய பெரிய தாமரை போலும் எ-று .

வி-ரை: உவமை அணியுடன் தீவக அணி கூடிவரின் அது உவமா தீவகமாம் .

திருமால் பேருரு எடுத்த காலத்துச் சூரியன் அவனுக்குக் குடைபோன்றும் , நாயகமணி போன்றும் , திலகம் போன்றும் , கௌத்துவம் போன்றும் , உந்திமலர் போன்றும் இருந்தது என்பதால் இது உவமையணி ஆயிற்று . 'இரவி' என்னும் சொல் மேற்கூறப்பட்ட சொற்களோடும் சென்றியைந்து , பொருள்படுதலின் தீவகமும் ஆயிற்று .

2. உருவக தீவகம்

எ-டு : ' கானற் கயலாம் வயலிற் கமலமாம்
ஏனற் கருவிளையாம் இன்புறவில் - மானாம்
கடத்துமேல் வேடர் கடுஞ்சரமா நீங்கிக்
கடத்துமேல் மெல்லியலாள் கண் '

இ-ள்: நெஞ்சமே ! இவளைத் தனியே யிருத்திவிட்டுப் பிரிந்து போவோமாயின் , இவளுடைய கண்களானவை , நெய்தல் நிலத்திற் செல்வேமாயின் கயலாத் தோன்றியும் , மருத் நிலத்திற் செல்வேமாயின் தாமரை மலராய்த் தோன்றியும் , குறிஞ்சி நிலத்திற் செல்வேமாயின் கருவிளை மலராய்த் தோன்றியும் , முல்லை நிலத்திற் செல்வேமாயின் மானாய்த் தோன்றியும் , பாலை நிலத்திற் செல்வேமாயின் வேடுவரது கையிலுள்ள கடிய சரமாய்த் தோன்றியும் , இப்படிச் செய்து நம் போக்கை விலக்கும் ஆகலான் , நமக்குப் பிரிதற்கு அரிது காண் எ-று .

கானல் - நெய்தல் . வயல் - மருதம் . ஏனல் - குறிஞ்சி . புறவு - முல்லை . கடம் - பாலை .

வி-ரை: உருவக அணியுடன் தீவக அணி கூடிவரின் அது உருவக தீவகமாம் .

ஒரு பெண்ணின் கண்ணைக் கயலாகவும் , கமலமாகவும் , கருவிளையாகவும் , மானாகவும் , சரமாகவும் உருவகிக்கப்பட்டிருத்தலின் உருவகம் ஆயிற்று . 'கண்' என்னும் சொல் மேற்கூறிய உருவகச் சொற்களுடன் சென்றியைந்து பொருள்படுதலின் தீவகமும் ஆயிற்று .

5. பின்வருநிலையணி

41. முன்வரும் சொல்லும் பொருளும் பலவயிற்
பின்வரு மென்னிற் பின்வரு நிலையே .