பக்கம் எண் :
 
88தண்டியலங்காரம்

எ-ன், நிறுத்த முறையானே பின்வருநிலை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்: ஒரு செய்யுள் முன்னர் வந்த சொல்லே பின்னர்ப்
பலவிடத்தும் வரினும், முன்னர் வந்த பொருளே பின்னர்ப் பலவிடத்தும்
வரினும் அது பினவரு நிலையென்னும் அலங்காரமாம். எ-று.

அவற்றுள்,

1. சொற்பின்வருநிலை

எ-டு; 'மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ்
மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார்-மாலிருள்சூழ்
மாலையின் மால்கடல் ஆர்ப மதன்தொடுக்கும்
மாலையின் வாளி மலர்'

இ-ள்: மதத்தால் மயங்கிய யானையின் இடர் தீர்த்தளித்த அரியுடைய தொடையால் சூழப்பட்ட பெரிய மலையை ஒத்த தோள்களை விரும்பிய இயல்புடையார்மேல்; மயங்கிருள் சூழ்ந்த அந்திப்பொழுதில் கருங்கடல் ஆர்ப்பக் காமன் இடையறாது மலராகிய கணைகளைத் தொடுக்கும் எ-று.


மால்-மயக்கம். கரி-யானை. காத்தல்-இடர்தீர்த்தல் . அளித்தல்-அருளல். மால்-திருமால், மாலை-தொடையல். மால்-பெருமை. வரை-மலை. ஆதரித்தல்-விரும்புதல். மாலை-இயல்பு.மாலிருள்-மயங்கிருள்,மாலை-அந்தி. மால்-கருங்கடல். மாலை-இடையறாமை.வாளி-அம்பு,மலர்-தாமரை முதலியன.

இதனுள் முன்வந்த 'மால்' என்னும் சொல்லே பின்னும் பலவிடத்து வந்தமையின் சொற்பின்வருநிலை ஆயிற்று.

2. பொருட்பின்வருநிலை

எ-டு; அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை-மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காத்தாள் குலை'

இதனுள் அவிழ்தலும், அலர்தலும், நெகிழ்தலும், விள்ளலும், விரிதலும், குலை கொள்ளுதலும் 'மலர்தல்' என்னும் ஓரு பொருள்மேல் நின்றனவாதலின் அப்பெயர்த்தாயிற்று.

வி-ரை, இ-ள்: தோன்றி மலர்கள் மலர்ந்தன, காயம் பூக்கள் மலர்ந்தன, அழகிய அரும்புடைய முல்லைகள் மலர்ந்தன; கொன்றை மரங்கள் செழித்து இதழ்கள் மலர்ந்தன; கருவிளை மலர்கள் மலர்ந்தன; காந்தள் மலர்கள் பூங்கொத்துக்களாகப் பூத்து விளங்கின என்பதாம்

'வருவது' என்னாது 'வருமெனின்' என்றதனான் முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பலவிடங்களிலும் வருதல் சொற்பொருட்பின்வருநிலை எனக்கொள்க.