சொற்பொருட் பின்வருநிலை
எ-டு; வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்'
-நாலடி-39
வி-ரை, இ-ள்: நாடொறும் நாள் கழிதலை அறிந்திருந்தும், அங்ஙனம் கழிதலைத் தம் வாழ்நாள்மீது வைத்து அது தான் இங்ஙனம் கழிகின்றது என்பதை அறியாதவர், நாடொறும் நாள் கழிதலைக் கண்டு துன்புறாமல், இன்புறு நாளாக எண்ணி மகிழ்வர் என்பதாம்.
இதன்கண் 'வைகலும் ' என்னும் சொல் பின்னர்ப் பலவிடத்தும் வந்தும் ஒரு பொருளையே தந்து நிற்றலின், இது சொற்பொருட்பின்வருநிலை ஆயிற்று.
இன்னும் அவ்விலேசானே, பிற அலங்காரங்களோடு கூடி வருவனவுங் கொள்க.
உவமைபொருட்பின்வருநிலை
எ-டு; 'செங்கமல நாட்டஞ் செழுந்தா மரைவதனம்
பங்கயஞ் செவ்வாய் பதுமம் போல்-செங்கரங்கள்
அம்போருகாந்தாள் அரவிந்த மாரனார்
தம்போ ருகந்தாள் தனம்'
என்பது உவமைப்பொருட் பின்வருநிலை. பிறவும் வந்த வழிக் கண்டு கொள்க.
வி-ரை: உவமை அணியுடன் பொருட்பின்வருநிலை அணி கூடிவரின் அது உவமைப்பொருட்பின்வருநிலையாம்.
இ-ள்:மன்மதனது காமப்போரை விரும்பியவளுடைய கண்கள் செந்தாமரை மலர் போன்றன; முகம் செந்தாமரை போன்றது; வாய் செந்தாமரை போன்றது; கைகள் செந்தாமரை போன்றன; கால்கள் செந்தாமரை போன்றன; கொங்கைகள் தாமரை யரும்பு போன்றன என்பதாம்.
ஒரு பெண்ணின் கண், முகம், வாய், கை, கால் ,கொங்கை ஆகிய வற்றிற்குத் தாமரையை உவமை காட்டினமையின் உவமையாயிற்று.தாமரை என்ற பொருளைக் குறிக்கும் சொற்கள் மீண்டும் மீண்டும் வந்துள்ளமையின் பொருட்பின்வருநிலை ஆயிற்று.
6. முன்னவிலக்கணி
42 முன்னத்தின் மறுப்பின்அது முன்ன விலக்கே
மூவகைக் காலமும் மேவிய தாகும்.
எ-ன், நிறுத்தமுறையானே முன்னவிலக்கு என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: ஒரு பொருளைக் குறிப்பினால் விலக்கின் அது முன்ன விலக்கு
என்னும் அலங்காரமாம். அஃது இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூவகைப்பட்ட காலங்களோடும் கூடியதாம் எ-று.
'மறுப்பது' என்னாது ;மறுப்பின்' என்றதனால், கூற்றினான் மறுப்பினும் அவ்வலங்காரமாம். குறிப்பினான் மறுப்பது பொருட் பொலிவும்