செய்யுட் சிறப்பும் நோக்கி எடுத்தோதினார்; ஏனையது அன்னது அன்மையின் இலேசான் உடன்பட்டார் என்பது.
இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்பனவற்றைக் 1கூற்றொடுங் குறிப்பொடுங் கூட்ட அறுவகையாம்.
அவற்றுள்,
1. இறந்தவினை விலக்கு
எ-டு; பாலன் தனதுருவாய் ஏழுலகுண் டாலிலையின்
மேலன்று கண்துயின்றாய் மெய்யென்பர்-ஆலன்று
2வேலைநீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்'
-பொய்கையார் அந்தாதி
இ-ள்: சோலை சூழ்ந்த குன்றமெடுத்த மாயவனே! நீ உலகம் ஏழையும் உண்டு பாலன் உருவத்தைக் கொண்டு ஆலிலையிலே உறங்கா நின்றாய் என்பது உலகத்துள்ளோர் மெய்யென்று சொல்லுவர்; நீ உலகத்தை உண்டு உறங்கிய ஆலானது, அன்று கடலுள்ளே நின்றதோ? ஆகாயத்தே நின்றதோ? மண்ணிலே நின்றதோ? சொல்லுவாயாக எ-று.
வி-ரை: இறந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியை விலக்குவது இறந்தவினை விலக்காம். இப்பாடல் கண்ணபிரானிடத்துப் பேரன்பு கொண்ட பொய்கையார் அப்பெருமானது அளவிலாற்றலை வியந்து கூறியதாகும்.
இப்பாடலில் பண்டொருநாள் கண்ணன் உலகனைத்தும் உண்ட பின்பு ஆலிலையில் கண் துயின்றான் என்ற நிகழ்ச்சி குறிப்பிட்டுள்ளது. உலகனைத்தும் உண்ட பின்பு ஆலிலை யொன்று தனியே இருப்பது பொருந்தாமையை, அவ்வாலிலை தான் அப்பொழுது கடலதோ? விண்ணதோ? மண்ணதோ? என வினாவுமுகமாக அந்நிகழ்ச்சியைக் குறிப்பாக விலக்கினமையின், இது இறந்தவினை விலக்காயிற்று.
இங்ஙனம் கூறவே இந்நிகழ்ச்சி நடந்திலது என்பது பொருளன்று. குன்றையே எடுத்துக் குடையாக பிடித்த நினக்கு, இதுவும் ஒரு அரிய செயலாமோ! என அப்பெருமானின் அளவிலாற்றலை வியந்ததாகக் கொள்க. இன்றேல் 'சோலைசூழ் குன்றெடுத்தாய்' என்ற அடைமொழி பயனின்றி நின்று வற்றும்.
2. எதிர்வினை விலக்கு
எ-டு; 'முல்லைக் கொடிநடுங்க மொய்காந்தள் கைகுலைப்ப
எல்லை யினவண் டெழுந்திரங்க - மெல்லியல்மேல்
தீவாய் நெடுவாடை வந்தால் செயலறியேன்
போவாய் ஒழிவாய் பொருட்கு'
இ-ள்: தலைவனே! முல்லைக் கொடியானது நடுங்க, நெருங்கிய காந்தள் மலரானது விரிய , ஓளியினையுடைய வண்டின் கூட்டங்கள் எழுந்தொலிக்கத், தீயையுடைய நெடிய வாடையானது மெல்லிய நடையையுடைய இவள்மேல் வந்தால் பின் விளையுஞ் செய்தி அறியமாட்டேன்! ஆதலின் பொருளீட்டுதற்குப் போவாய் ஒழிவாய் எ-று.
1.கூற்று- வெளிப்படை. அதற்கு எடுத்துக்காட்டு ஈண்டில்லை.
2.'வேலைசூழ் நீரதோ' என்பதும் பாடம்.