பக்கம் எண் :
 
104இறையனார் அகப்பொருள்

       ‘குணகடல் திரையது பறைதபு நாரை
       திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
       அயிரை ஆரிரைக்கு அணவந் தாஅங்குச்
       சேயள் அரியோட் படர்தி
       நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே’          (குறுந்-128)


எனக் கண்டுகொள்க.                                          (17)
                      
சூத்திரம்-18

        குறியெனப் படுவ திரவினும் பகலினும்
        அறியக் கிளந்த இடமென மொழிப.

      என்பது என்னுதலிற்றோ எனின், குறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     
இதன் பொருள்: குறியெனப்படுவது என்பது - குறியென்று
சொல்லப்படுவது என்றவாறு; இரவினும் பகலினும் என்றாராயினும்,
மொழிமாற்றிப் பகலின் கண்ணும் இரவின்கண்ணும் எனக் கொள்க, என்னை?
பகற்குறி நிகழ்ந்த பின்னை இரவுக்குறி நிகழற் பாலதாகலான்; அவ்
வொழுக்கம் நிகழ்ந்த முறைமை நோக்கி மொழிமாற்றிச் சூத்திரம்
உரைக்கப்படும். அஃதேயெனின், குறியெனப்படுவது பகலினும் இரவினும் என
அமையாதோ? என்பது கடா; அதற்கு விடை, அவ்வொழுக்கம் மறைத்தலைத்
தனக்கு 1அணிகலமாக உடைத்தாகலான் இரவுக்குறி பொருந்தியதுணைப்
பகற்குறி பொருந்திற்றன்று என்பதனை உணர்த்துதற்பொருட்டுச் சூத்திரத்துள்,
‘இரவினும் பகலினும்’ என இரவுக்குறி முன்வைக்கப்பட்டது; அறியக் கிளந்த
இடம் என மொழிப என்பது-உணரச் சொல்லப்பட்ட இடம் எனச் சொல்லுப
ஆசிரியர் என்றவாறு.

      யார்க்கு யாரோ சொல்லுப எனின், தோழி தலைமகற்குச் சொல்லியது.
அஃதாமாறு, தலைமகன் தோழியை இரந்து குறையுற்றுப் பின்னின்ற இடத்து
ஆற்றுவன சில சொற்சொல்லி ஆற்றுவித்துக் குறைநயப்பித்து, அவ்வாறு
நின்ற தோழியைப் பின்னுந் தலைமகன் எதிர்ப்படும்; எதிர்ப்பட்டானை,
‘இன்ன இடத்து வா’ என்று குறிப்பினான் உணர்த்தும், அதற்குச் செய்யுள்:

  
  (பாடம்) 1. இலக்கணமாக.