பக்கம் எண் :
 
106இறையனார் அகப்பொருள்

      இவ்வகை பகற்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைக்
காணும்பொழுதிற் காணாப்பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய், நெஞ்சு
மிக்கது வாய்சோர்ந்து, கடலிற்கானுங், கானலிற்கானும், புள்ளிற்கானும்,
நெஞ்சிற்கானும், வறிதே குழவி அழுதாற்போல, ஒரு சொற் சொல்லும்;
அவ்வகை சொல்லுமதற்குச் செய்யுள்:
 

                   நெஞ்சொடு வருந்தல்

  ‘பொருமா மணிமுடி மன்னரைப் பூலந்தைப் பூவழித்த
  குருமா மணிவண்ணன் கோனெடு மாறன் குமரிமுந்நீர்
  அருமா மணிதிகழ் கானலின் வாய்வந் தகன்றகொண்கன்
  திருமா மணிநெடுந் தேரொடுஞ் சென்றதென் சிந்தனையே.’   (145)

      தலைமகள் அவ்வாறு சொல்லினவிடத்துத் தலைமகன் கேட்பின்
வரைந்து புகுவானாம்; தோழி கேட்பின் தலைமகனை வரைவுகடாவுவாளாம்.
யாருங் கேட்பாரில்லையாயின், தலைமகள் சொல்லி ஆற்றுவாளாம்.
மூடியிருந்து வேவதோர் கொள்கலம் மூடியது திறந்தவிடத்து, ஆவி எழுந்து
முன் நின்ற வெப்பம் நீங்கினாற்போல, அச் சொற் சொல்ல ஆற்றாமை
பண்டையிற் சிறிதளவு1 படுதலாம்.

      இனிப், பகற்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைக் காணும் பொழுதிற்
காணாப்பொழுது பெரிதாகலான் தலைமகள் ஆற்றாளாயின விடத்துத், தோழி
அவள் ஆற்றாமைக்குப் பரிந்து, உடனாயிருந்த புள்ளுநோக்கி இவைகண்டும்
ஆற்றிச்செல்வாட்கு, இவையும் நீங்கின, இனி எங்ஙனம் ஆற்றுங்கொல்லோ
எனத் தலைமகற்குச் சிறைப்புறனாகச் சொல்லும்; அதற்குச் செய்யுள்:

            
ஆற்றும்வாயில் அகன்றமையுணர்த்தல்

  ‘அன்னம் புரையும் நடையாள் புலம்பெய்த அத்தமென்னும்
  பொன்னஞ் சிலம்பு கதிரோன் மறைதலும் போயினவால்
  தென்னன் திருமால் கழல்நெடு மாறன் திருந்துசெங்கோல்
  மன்னன் குமரிக் கருங்கழி மேய்ந்தவண் டானங்களே.’       (146)

  ‘பொருங்கழல் மாறன்புல் லாமன்னர் பூலந்தைப் பூங்குருதி
  மருங்கழி நீர்மூழ்கக் கண்டஎங் கோன்தொண்டிக் கானல்வண்டார்
  கருங்கழி மேய்ந்தசெங் கால்வெள்ளை அன்னங் கதிரொடுந்தம்
  பெருங்கழி காதன்மை நீங்கி இவளிற் பிரிந்தனவே.’         (147)

  (பாடம்) 1. படுவதாம்.