‘மேயின தம்படை யோடுமெம் மெல்லிய லாளைவெந்தீப்
பாயின மாலைக்குக் காட்டிக் கொடுத்துப் பரந்துமண்மேல்
ஆயின சீரரி கேசரிக் கன்றள நாட்டுடைந்து
போயின தெவ்வரிற் போயின கானலிற் புள்ளினமே.’
(148)
இவ்வகை சொல்லக்கேட்ட தலைமகன், ‘யான் வந்தொழுகா
நின்ற
இவ்வொழுகலாறுதான் இவட்கு ஆற்றாமைக்குக் காரணமாயிற்றுப் போலும்’
என, அவ்வாறு வந்தொழுகாது வரைந்து புகுவானாம். இவ்வகையெல்லாம்
பகற்குறியுள்ளே அடங்கும் எனக் கொள்க.
இனி,
இரவுக்குறி
யாமாறு:
பகற்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் இன்று தெருளும் நாளைத்
தெருளும் எனத் தெருளானாய் நெடுங்காலமும் வந்து ஒழுக, இவ்வொழுக்கம்
புறத்தார்க்குப் புலனாயதறிந்தவிடத்து இவள் இறந்துபடும், இவள் இறந்துபட
இவனும் இறந்துபடும் என ஆற்றாளாய், வரைவுகடாதற்குச்
செறிப்பறிவுறுக்கின்று முன்னுடைத்தாக அறிவுறூஉம். என்னை, கதுமெனத்
தமர் இற்செறித்தவிடத்து எமர் எம்மை இற்செறித்தார் என்ற ஞான்று
ஆற்றானாகவும் பெறும்; அதனான், முற்படவே செறிப்பறிவுறூஉம்; என்னை,
ஆற்றானாமெனிற் சொல்லுவது தெளியச் சொன்னேன் எனத்
தெருட்டுதற்பொருட்டு என்பது.
இனித், தோழி வரைவுகடாவுகின்றுழி, குறிப்பினான் வரைவு
கடாவுதலும், வெளிப்படையான் வரைவுகடாவுதலும் என இரு திறத்தன.
அவற்றுள், குறிப்பினான் வரைவுகடாவுமாறு: ‘யாய் எம்மை உறுப்பிற்
குறிக்கொண்டு நோக்கினாள்’ என்னும்; எனவே, தலைமகன், ‘இவர்
இற்புறத்துப் போய் விளையாடும் பதத்தர் அல்லர், இவரை இற்செறிக்க
வேண்டுமென்று போலும் அவ்வாறு நோக்கியது’ எனத் தெருண்டு
வரைந்தெய்தப்பெறும்.
யாய் உறுப்பிற் குறிக்கொண்டு நோக்கினாளென்னுமதற்குச்
செய்யுள்:
தாயறிவுரைத்தல்
‘நீர்வண்ணன் வெண்திரை மேல்நின்ற வேந்தன்நெல்வேலியொன்னார்
போர்வண்ணம் வாட்டிய பூழியன் பூந்தண் குருந்தொசித்த
கார்வண்ணன் போல்வண்ணன் காவிரி நாடன்ன காரிகையாள்
ஏர்வண்ண நோக்கிப்பின் என்னையும் நோக்கினள் எம்மனையே.’(149)
|