பக்கம் எண் :
 
108இறையனார் அகப்பொருள்

 ‘உளமலை யாமைத் திருத்திப் பொருவான் உடன்றெழுந்தார்
 களமலை யாமைக் கடையல்வென் றான்கடல் தானையன்ன
 வளமுலை வான்முறு வல்தையல் ஆகத்து வந்தரும்பும்
 இளமுலை நோக்கிநின் றென்னையும் நோக்கினள் எம்மனையே.’(150)

     அல்லது, இவ்வாற்றானுஞ் செறிப்பறிவுறூஉம்; அதற்குச் செய்யுள்:

           
புனத்தொடுவைத்துக் குறிப்புரை கிளத்தல்

  ‘செயல்மன்னு மாவது சொல்லாய் சிலம்பதென் பாழிவென்ற
  கயல்மன்னு வெல்பொறிக் காவலன் மாறன் கடிமுனைமேல்
  அயல்மன்னர் போற்கொய்து மாள்கின்ற தாலணி வானுரிஞ்சும்
  புயல்மன்னு கோட்ட மணிவரைச் சாரலெம் பூம்புனமே.’      (151)

  ‘என்னேர் அழியா வகையென்னை வெற்ப இருஞ்சிறைவாய்
  மன்னேர் அழியவென் றான்முனை போற்கொய்து மாள்கின்றதால்
  மின்னேர் திகழும் மழைகால் கிழிய வியலறைவாய்ப்
  பொன்னேர் திகழும் மணிவரைச் சாரற் புனத்தினையே.’     (152)
 

     இனி, இவ்விடத்து வரப்பெறாய் என்பதுபடத் தலைமகற்குத் தோழி
முன்னின்று சொல்லவும் பெறும்.

     இனி, முன்னிலைப்புறமொழியாகத், தலைமகன் வரவுணர்ந்து,
வேங்கைக்கு உரைப்பாளாய்த் தலைமகன் கேட்ப இவ்வாறு சொல்லியுஞ்
செறிப்பறிவுறுத்தும்; அதற்குச் செய்யுள்:

             
பணிமொழிப்பாங்கி கணியொடு கூறல்

  ‘திரையார் குருதிப் புனல்மூழ்கச் செந்நிலத் தன்றுவென்ற
  உரையார் பெரும்புகழ்ச் செங்கோல் உசிதனொண் பூம்பொதியில்
  வரையார் தினைப்புனங் கால்கொய்ய நன்னாள் வரைந்துநின்ற
  விரையார் மலரிள வேங்காய் நினக்கு விடையில்லையே.’     (153)


  ‘வானுடை யான்முடி மேல்வளை யெற்றியும் வஞ்சியர்தம்
  கோனுடை யாப்படை கோட்டாற் றழிவித்துங் கொண்டவென்றி
  தானுடை யான்தென்னன் சத்துரு துரந்தரன் பொன்வரைமேல்
  மீனுடை யான்கொல்லி வேங்காய் நினக்கு விடையில்லையே.’ (154)


  இவ்வகையுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள்:

 
‘நன்றுசெய் தாயல்ல நன்னுத லாய்நறை யாற்றுவெம்போர்
  நின்றுசெய் தாருந்தி வந்த நெடுங்கைக் களிற்றுடலால்
  குன்றுசெய் தான்கொல்லி வேங்கையை மெல்லரும் பாகக்கொய்தல்
  அன்றுசெய் தாமெனில் நிற்பதன் றோநம் அகன்புனமே.’    (155)