சுரத்திடைச் செல்லுந் தலைமகனையும் தலைமகளையும் கண்டு
எதிர்வருகின்றார்,
‘யார்கொல் இவ்வாறு போந்தார்?’ எனச் சொல்லியதற்குச்
செய்யுள்:
சுரத்திடைக்கண்டோர் குறிப்பொடு கூறல்
‘வில்லான் விறலடி மேலன பொற்கழல் வெண்முத்தன்ன
பல்லாள் இணையடி மேலன பாடகம் பஞ்சவற்கு
நெல்லார் கழனி நெடுங்களத் தன்று நிகர்மலைந்த
புல்லா தவரென யார்கொல் அருஞ்சுரம் போந்தவரே’. (191)
‘வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே’. (குறுந்-7)
இனிச், செவிலி எதிர்வருகின்ற பார்ப்பாரைக் கண்டு வினாயதற்குச்
செய்யுள்:
வேதியரை வினாதல்
‘நிழலார் குடையொடு தண்ணீர்க் கரகம் நெறிப்படக்கொண்
டழலார் அருஞ்சுரத் தூடு வருகின்ற அந்தணிர்காள்
கழலான் ஒருவன்பின் செங்கோற் கலிமத னன்பகைபோற்
குழலாள் ஒருத்திசென் றாளோ உரைமின்இக் குன்றிடத்தே’. (192)
‘குடையார் நிழலுறி சேர்கர கத்தொடு குன்றிடத்து
நடையால் மெலிந்து வருகின்ற அந்தணிர் ஞாலமெல்லாம்
உடையான் ஒளிவேல் உசிதன்தென் கூடலொண் தீந்தமிழ்போல்
இடையாள் விடலைபின் சென்றன ளோவிவ் விருஞ்சுரத்தே’. (193)
சுரத்திடைச் செல்லாநின்ற தலைமகள் நின்ற சூழலும், தலைமகன் எய்த
வேழமும் கண்டு செவிலி சொல்லியதற்குச் செய்யுள்:
வியந்துரைத்தல்
‘செறிகழல் வேந்தரைச் சேவூர் அமரிற் செருக்கடந்த
நெறிகெழு கோனெடு மாறன் முனைபோல் நெடுஞ்சுரத்து
வெறிகமழ் கோதையிங் கேநின்ற திஃதாம் விடலைதன்கைப்
பொறிகெழு திண்சிலை வாளியின் எய்த பொருகளிறே’.
(194)
|