பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 129
 

    வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை
    என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
    தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
    அன்னார் இருவரைக் காணிரோ பெரும!
    காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை
    ஆணெழில் அண்ணலோ டருஞ்சுர முன்னிய
    மாணிழை மடவரல் தாயிர்நீர் போறிர்;

    பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
    மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்
    நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;

    சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
    நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்
    தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;

    ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
    யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்
    சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;

    எனவாங்கு,
    இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின்
    சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
    அறந்தலை பிரியா ஆறுமற் றதுவே.’           (கலி. பாலை-8)

     செவிலி சுரத்திடைச் செல்லாது, மனையகத்திலிருந்து சொல்லும்
என்பாருமுளர்; அது 1பொருந்துமாற்றி னறிந்துகொள்க. அல்லதூஉம்,
ஆங்ஙனம் புணர்ந்து உடன் போய்ச் சில நாட் கழிந்தபின்னை,

   
 ‘அறத்தொடு நிலையின் அஃதறிந் திருந்த
     சிறப்புடை மரபின் தெய்வம் அன்ன
     இருபெருங் குரவரொடு பொருவில் ஆற்றல்
     தன்னையர் தம்மைச் சால்புடை மரபின்
     மன்னிய சிறப்பின் மதியோர் தேற்ற
     அதுபண் பாதல் விதியுளி தெருண்டபின்
     மீண்டு வந்து வியநகர் விரும்ப
     மாண்டகு சிறப்பின் வரைந்தெய்து மென்ப.’

      அவ்வகை மறித்து வாராநின்றாள் சுரத்திடை முன்னுறச் செல்வாரை,
‘என் ஆயத்தார்க்கு எனது வரவினைச் சொல்லுமின்’ என்னும்; அதற்குச்
செய்யுள்:

   
(பாடம்) 1. பொருந்துமாறு.