பக்கம் எண் :
 
172இறையனார் அகப்பொருள்

     இனி, ஒரு திறத்தார், காதலைச் செய்யும் பரத்தை காதற்பரத்தை என்ப;
என்னை காரணம் எனின், வைகலும் பாலே துய்த்துச் செல்வான் ஒருமகன்
இடையிடை புளியுங்காடியும் உண்டக்காலாம் பிற பாலினது விசேடம்
அறிவானாவது. அஃதே போலத் தலைமகள் குணங்களைத் துய்த்துச்
செல்லாநின்றான் இடையிடை சிறுகுணத்தராகிய பரத்தையர்மாட்டுப் பிரிந்து
வரத் தலைமகள்மாட்டுக் காதல் பெருகும். அல்லாதுவிட்டக்கால் இவள்
குணம் 1பொருவரியது என்பது அறியலாகாது. என்னை, இன்னாதது ஒன்று
உண்மையான் இனியதன் இன்பம் அறியப்படும் என்பது. இவ்வுரையும்
பொருந்தாது. என்னோ காரணம் எனின், அவரொடு சார்த்திக்கொண்டன்றே
இவள் குணங்களைப் பெரிய என்று அறிவது எனின், அவர்மாட்டுப் பிரியாது
விட்டவிடத்து இவடன் குணங்களை மிக்கனகொல்லோ மிக்கிலகொல்லோ
என ஐயப்பட்டு நின்றா னாகல்வேண்டும். அங்ஙனமாயின், தான் அவள்
என்னும் வேற்றுமையில்லார் என்பதனொடு மாறுகொள்ளும். என்னை, தம்
குணங்களை ஐயப்படுவார் இன்மையான் என்பது.

     மற்று என்னோ உரை எனின், தலைமகனாற் காதலிக்கப்பட்ட பரத்தை
எனக்கொள்க. அஃதே யெனின், இவன் கண்டாரை யெல்லாங்
காமுறுவானாகானோ எனின், ஆகான்; ஆகாதவாறு சொல்லுதும்;
தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவன அறம் பொருள் காமம் என
மூன்று; அம் மூன்றினையும், ஒரு பகலை மூன்று கூறிட்டு, முதற்கட்
பத்துநாழிகையும் அறத்தொடு பட்டுச் செல்லும்; இடையன பத்துநாழிகையும்
அருத்தத்தொடுபட்டுச் செல்லும்; கடையன பத்துநாழிகையும்
காமத்தொடுபட்டுச் செல்லும்; ஆதலான், தலைமகன் நாழிகை
அளந்துகொண்டு கருமத்தொடுபடுவான், தலைமகளும் வேண்டவே தானும்
வேண்டிப்போந்து அத்தாணி புகுந்து அறங்கேட்பதும் அறத்தொடுபட்டுச்
செல்வதும் செய்யும்; நாழிகை அளந்துகொண்டு இடையன பத்துநாழிகையும்
இறையும் முறையும் கேட்டு அருத்தத்தினொடுபட்டு வாழ்வானாம். அவற்று
நீக்கத்துக் கடையன பத்துநாழிகையுள் தலைமகளுழைப் போதரும்; போதர,
அப் போதரவு பார்த்திருந்த பரத்தையர் குழலூதி யாழெழீஇத்
தண்ணுமையியக்கி முழவியம்பித் தலைமகனை இங்குக் கூத்துண்டு என்பது
அறிவிப்ப; என்னை,

    
‘குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர்
     முழவியம்ப லாமந் திரிகை’

  (பாடம்) 1. ஒருவழியது.