வன்பொறை எதிரழிந்து கூறல்
‘தகரக் குழலாய் தகவில ளேசங்க மங்கைவென்ற
சிகரக் களிற்றுச்செங் கோனெடு மாறன்தென் கூடலின்வாய்
மகரக் கொடியவன் தன்னிள வேனில் மலர்விலைக்குப்
பகரக் கொணர்ந்தில்லந் தோறும் திரியுமிப் பல்வளையே.’ (272)
‘அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத் தெஃகெறிந் தாங்குப்
பிரிவில புலம்பி நுவலுங் குயிலினும்
தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே
அதனினுங் கொடியள் தானே மதனின்
துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு
பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனிமட மகளே.’ (நற்றிணை 97)
இவ்விடத்துச் செய்யுட்கள் பலவும் வந்தவழிக் கண்டுகொள்க. (6)
சூத்திரம்-40
காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே.
என்பது என்னுதலிற்றோ எனின், மேல் எல்லாப் பிரிவுகளையும் சிறப்பு
வகையான் உணர்த்தினார்;
இனிப், பரத்தையிற் பிரிவு 1எல்லார்க்கும் உரித்து
என்பது உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே என்பது-
ரத்தையிற்பிரிவு எல்லா
வருணத்தார்க்கும் உரித்து என்றவாறு.
தம்மைக்கண்டு காதலித்தார் என்பது அறிவரன்றே, பேரறிவினராகலான்;
அன்னார் தாம்
பின்னைத் தலையளியாது விடுவது அருளன்று; அதனால்,
எல்லார்க்கும் உரித்து எனக் கொள்க.
இவ்வுரை பொருந்தாது; என்னை
காரணம் எனின், மிக்காரைக் கண்டால் இழிந்தாரும் உயர்ந்தாரும்
மற்றும்
எல்லாரும் காதலிப்ப, அவர்மாட்டெல்லாம் பிரியவேண்டும். பிரியவே
எல்லாக்
குற்றமும் தங்கித் தலைமையொடு மாறுகொள்ளும்; அல்லதூஉம்,
அன்பினாற் பிரியார்
அருளினாற் பிரிவர் என்பதூஉஞ் சொல்லப்பட்டதாம்.
அதனாற் காதலித்தாள்மாட்டுப்
பிரியும் பிரிவு அமையாது எனக்கொள்க.
(பாடம்) 1. நால்வர்க்கும்.
|