பரத்தையிற் பிரிந்தான் தலைமகன் என்றால், ஊடலே புலவியே துனியே
என்றிவை நிகழும். நிகழ்ந்தால்,
அவை நீக்கிக் கூடினவிடத்துப் பெரியதோர்
இன்பமாம்; அவ்வின்பத் தன்மையை வெளிப்படுப்பன
அவை எனக்கொள்க.
இவன் மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியனாகலான் இப் பிரிவு
வேண்டினான்
என்பது.
அஃதே எனின், காதற்பரத்தை எல்லார்க்கும் உரியள் என்றாகாதே
சூத்திரம் செய்தற்பாலது,
‘உரித்து’ என்று அஃறிணைவாய்பாட்டாற் சொல்லிற்று
எற்றிற்கோ எனின், பிரிவதிகாரம்
வாராநின்றமையான் பிரிவும் உரித்து என்று
சொல்லப்பட்டது,
பரத்தையர்மாட்டுப் பிரியும் பிரிவின்கட் செய்யுள்:
தோழி வாயில்மறுத்தல்
‘மைவார் இரும்பொழில் வல்லத்துத் தெவ்வர்க்கு வான்கொடுத்த
நெய்வாய் அயினெடு மாறன்தென் னாடன்ன நேரிழையாய்
இவ்வாய் வருவர்நங் காதலர் என்னவுற் றேற்கெதிரே
செவ்வாய் துடிப்பக் கருங்கண் சிவந்தன சேயிழைக்கே.’ (273)
பரத்தையிற் பிரிந்த தலைமகன் பெயர்ந்து தோழியை வாயில்வேண்டத்
தோழி வாயில்மறுத்தாள்
என்பது. என்சொல்லி வாயில்மறுத்தாளோ எனின்,
‘எம்பெருமானது நிலைமை இன்னதென்று
சொல்லலுற்றேன், எனது
குறிப்பறிந்து இந்நிலைமையள் ஆயினாள், இதற்குத் தக்கதறிந்து செய்ம்மின்’
என்று வாயின்மறுத்தாள் என்பது.
இனிப், பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாகப் புக்க பாணன்
தலைமகளால் வாயில்
மறுக்கப்பட்டு முன்னின்று நீங்கியதற்குச் செய்யுள்:
பாணன் புலந்துரைத்தல்
‘சென்றே ஒழிக வயலணி ஊரனும் தின்னத்தந்த
கன்றே அமையுங்கல் வேண்டாபல் யாண்டு கறுத்தவரை
வென்றே விழிஞங்கொண் டான்வியன் ஞாலம் மிகவகலி
தன்றே அடியேன் அடிவலங் கொள்ள அருளுகவே’ (274)
மற்றும் வாயில்பெறாது பரத்தையிற் பிரிந்த தலைமகன் மகனை
வாயிலாகக்கொண்டு புக்கானைக்
கண்டு பொறாமை நீங்க வேண்டித் தோழி
சொல்லியதற்குச் செய்யுள்:
|