பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 185
 

சொல்லுதல். இவ்வாறு சொல்லினவிடத்துத் தலைமகன் மாட்டுப் புலவியே
கொள்ளக் கருதிச் சொன்னாளாம் என்பது. அதற்குச் செய்யுள்:


தலைவி தற்புகழ்தல்


   ‘வெறிதரு பூந்தார் விசாரிதன் வேலைமுந் நீர்வரைப்பின்
   நெறிதரு கோல்செல்லும் எல்லையுள் ளேமல்ல நீர்மையில்லாச்
   சிறியவர் வாழ்பதி யேயெமர் இல்லஞ் சிறிதெமக்கே
   எறிபுனல் ஊரஎவ் வாறும் அமையும்நின் இன்னருளே.’       (293)


சூத்திரம்-49


   அவன்வயின் கிளப்பின் வரைவின் பொருட்டே.

என்பது என்னுதலிற்றோ எனின், இவ்வாறு சொல்லின் வரைவின்
பொருட்டாகும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள்: அவன்வயின் கிளப்பின் என்பது - நாடும் ஊரும்
இல்லும் சுட்டித் தலைமகனைச் சார்த்திச் சொல்லின் என்றவாறு;
வரைவின்பொருட்டே என்பது-வரைதல் என்பது, நீக்கி நிறுத்தற் பொருளவாம்
என்றவாறு.

     யாதினை நீக்கிநிறுத்தலோ எனின், புலவியை நீக்கி நிறுத்தல். அஃது
என்னை பெறுமாறு எனின், மேற்சூத்திரத்திற், ‘புலவி’ என்று அதிகாரம்
வாராநின்றதாகலான் என்பது.
 

     பரத்தையை மறுத்தந்து வாயிலாற் புக்க தலைமகனை ஏற்று
எதிர்கொண்டு வழிபட்டாள்; பின்னைக் காரணத்தின் நீங்கிய பொறாமைக்குக்
காரணம் பெற்றுத் தோற்றிற்று. அது தோன்றத், தலைமகனை ஒன்றன்

தலைக்கீடாகச் சொல்லுதல்; ‘எம்பெருமான், நீர் பெரிதாகிய நாட்டிற்
பெரிதும்மிக்க ஊரிற் பெரிதும் மிக்க குலத்திற் பிறந்த பேரொழுக்கத்தினீர்க்குத்
தக்கதே சிறியேமாகிய எந்திறத்துத் தலையளி!’ எனச் சொல்லுதல்; இவ்வாறு
சொல்லுவாள் புலவி நீக்குவான் சொல்லிற்றாக என்பது; அவ்வாறு
சொல்லியதற்குச் செய்யுள்:


மிக்கீர்க்கிது தக்கதன்றென்றல்


   ‘வரியவண் டார்தொங்கல் மான்தேர் வரோதயன் வல்லத்தொன்னார்
   கரியவை வேல்கொண்ட காவலன் காக்கும் கடலிடம்போல்
   பெரியநல் நாட்டிற் பெரியநல் லூரிற்பெரிய இல்லிற்
   குரியமிக் கீர்க்கியல் பன்றுகொல் இவ்வா றொழுகுவதே.’     (294)