பக்கம் எண் :
 
40இறையனார் அகப்பொருள்

பெண்டிர்க்கு மிக இயல்பு; அதனைத் தனக்குச் செய்துகோளன்றி இயல்பாக
உடையாள் என்றவாறு; எனவும் தன் நயப்பு உணர்த்தினான்.

      இனிச் செந்துவர்வாய் என்பது-செம்மையைத் தனக்கு மிகவுடைய
வாய் என்றவாறு. செம்மையுடையார் என்பது உலகத்துத் தம் குணங்களை
மறையாது ஒழுகுவாரை. இவள் வாயும் தன் குணமாகிய வடிவும் 1மொழியும்
றுநாற்றமும் என்று இவற்றான் விளங்கிப் பொலிந்து தோன்றுவது என்றவாறு;
என்றதனானும் தன் நயப்பு உணர்த்தினானாம்.

      இனி, நாறுந் தகைமையவே என்பது, ஐந்து ஏகாரத்துள்ளும்
இவ்வேகாரம் வினாவின்கண் வந்த ஏகாரம் எனக்கொள்க.

       ‘
தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
        யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே
’      (இடையியல் - 9)

என்பவாகலின்.

      அணி ஆம்பல் நறுமலர் என்பது-அழகிய ஆம்பல் நறுமலர்
என்றவாறு. அணியாம்பல் நறுமலர் என்றதனாற் போந்தது அழகியாரின்
குணங்களும் பெரும்பான்மையும் அழகியவாகலான், அவ்வாம்பற்கண்ணது
மிக்க நறுநாற்றம் என்றற்குச் சொல்லப்பட்டது. அவ்வகை நறுநாற்றம்
மிகவுடைய ஆம்பல் இவள் வாய்போல நாறுமே என்றவாறு.

      மலரே என்று நின்ற ஏகாரம் ஈற்றசை ஏகாரம்.

      இனி, இதனைச் சோதிக்குமாறு; ‘செந்துவர் வாய் நாறுந்
கைமையவே’ என்றதல்லது, போல என்றது இல்லையால் எனின், உவமம்
தொக்கு நின்றது என்று கொள்க.

     என்னை,

        
வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
         வினையின் தொகையே பண்பின் தொகையே
         உம்மைத் தொகையே பன்மொழித் தொகையென்
         றவ்வா றென்ப தொகைமொழி நிலையே
’  [எச்சவியல் - 16]

என்று ஓதினமையின்.

      ஆயின், உவமம் தொகுக; உவமிக்கும் முறைமையன்றி உவமித்தீர்.
உலகத்துப் பெண்பால்கள் வாயது நறுநாற்றத்திற்கு உவமையாவது ஆம்பல்
என்றவாறு.

       
 (பாடம்) 1. ஒளியும்.