பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 41
 

   என்னை,

    
ஆம்பல் நாறுந் தேம்பொதி1 துவர்வாய்’ (குறுந் - 300)

என்பவாகலின்.

     இவ்வாறன்றி, இவள் வாய்போல நாறும் ஆம்பல் உளவே என, வாயை
உவமை யாக்கி, ஆம்பலை உவமிக்கப்படும் பொருளாகச் சொல்லுதல்
குற்றம்பிற எனின், அறியாது சொல்லினாய், உலகத்து, இவை உவமை, இவை
உவமிக்கப்படும் பொருள் என்று நிலைபெற்றன உளவே யில்லை. உரைக்குங்
கவியது குறிப்பினான் உவமையும் உவமிக்கப்படும் பொருளாம்;
உவமிக்கப்படும் பொருளே உவமையாகவும் அமையும்.

    என்னை,

      ‘
பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின்
       மருளற வரூஉ மரபிற் றென்ப


என்று ஓதினமையான்.

     
 ‘கண்போல் நெய்தல் போர்விற் பூக்கும்     [நற்றிணை - 8]
எனவும்,
       ‘
கண்ணென மலருங் குவளை
எனவும்,
     
 ‘குவளை உண்க ணிவளும் யானும்’            [அகம் - 156]
எனவும்,
     
 ‘நெய்த லுண்கண் பைதல் கூர.’            [நற்றிணை - 113]
எனவும் இருவகையானுஞ் சொல்லுப ஆகலின், இருவகையானும் உவமிக்க
அமையும் என்பது.

      இனி, மருதநிலத்து ஆம்பலைக் குறிஞ்சி நிலத்து ஆம்பலாகச்
சொல்லுதல் திணைவழுவாம்பிற எனின், ஆகாது; குறிஞ்சி நிலத்து வண்டு
குறிஞ்சி நிலத்தே திரிவன அல்ல; எல்லா நிலத்துஞ் சென்று, எல்லாப் பூவும்
ஊதுமாகலானும் அமையும். அல்லதூஉம்,


     ‘எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
     அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
     வந்த நிலத்தின் பயத்த வாகும்
’        (அகத்திணையியல் - 1)

என்பதாகலானும் அமையும்.

        
(பாடம்) 1. கிளவி.