பக்கம் எண் :
 
48இறையனார் அகப்பொருள்

வழியே செல்லாநின்றான் இழுக்கினால் அவ்விழுக்கினை இழுக்காவது
அறிந்து, அதன்கணின்று மீடல் மிக்கது; மீண்டு நிற்கிலான் எனின், இவ்வாறு
ஒழுகும் என்று அவன் ஒழுகும்திறம் உணர்த்துதல் நுதலிற்று.

     
இதன் பொருள்: ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் என்பது-அவ்வாறு
கூடிப்பிரிந்த தலைமகன் என்றவாறு; தன் வயின் பாங்கனோரிற் குறி
தலைப்பெய்தலும் என்பது-தன் பாங்கனாற் குறியிடத்துத் தலைப்பெய்தலும்
என்றவாறு; பாங்கிலன் தமியோள் இடந்தலைப்படலும் என்பது-
பாங்கனையின்றித் தனியாளை இடத்து எதிர்ப்படுதலும் என்றவாறு; ஆங்க
என்பது அசைச்சொல்; இரண்டு என்பது தொகை; தலைப்பெயல் மரபே
என்பது-தலைப்பெய்தற்கு இலக்கணம் என்றவாறு.

      அவ்வாறு புணர்ந்து நீங்கிய தலைமகன் பிற்றைஞான்று
தன்பாங்கனாற் குறியிடத்துத் தலைப்பெய்தலும், பாங்கனையின்றியே
தனியாளை இடத்து எதிர்ப்படுதலும் என அவ்விரண்டில் ஒன்றே
தலைப்பெய்தற்கு இலக்கணம் என்றவாறு.

      அவ்வகை புணர்ந்த கிழவோன் என்பது, தெய்வம் இடை நிற்பப்
பான்மையால் உய்க்கப்பட்டு யாரும் இல் ஒரு சிறைத் தலைப்பெய்த
தலைமகன் என்றவாறு. எனவே, அவ்வாறு புணரப்பட்டாள் தலைமகள்
எனப்பட்டது.

      கிழமையுடைமையின் கிழவன் எனப்பட்டது, தலைமை யுடைமையின்
தலைமகன் எனப்பட்டது; அவட்கும் அவ்வாறே கொள்க.

                    
  பாங்கற் கூட்டம்

      இனிப் பாங்கற் கூட்டம் ஆமாறு சொல்லுதும்; இயற்கைப்புணர்ச்சி
புணர்ந்து ஆற்றுவித்துப் பிரிந்த தலைமகன் ஆங்குப்பட்ட வார்த்தை
யெல்லாம் நினைக்கும். நினைக்குமாறு யாதோ எனின், ‘நின்னிற் பிரியேன்,
பிரியின் ஆற்றேன்’ எனச் சொல்லிப், ‘பிரியப்பட்டாள் தன்னைக் காணாத
என் நிலைமை நினைந்து ஆற்றாளாங்கொல்லோ’ எனவும், ‘ஆற்றாளாகி
நின்றாள் தனது வேறுபாட்டைப் புறத்தார் அறியாமை மறைக்குமாறு
அறியாது வருந்துங்கொல்லோ’ எனவும், இவை முதலாயின நினைந்து
ஆற்றானாம்.

                      
உற்றது வினாதல்

      ஆற்றாநிலைமையானைப் பிற்றைஞான்று சிறுகாலையே தலைப்படும்
பாங்கன்; தலைப்பட்டு, அடியிற்கொண்டு முடிகாறும்