பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 59
 

பாங்கன் பார்ப்பானாகலின் பன்மை வாசகத்தாற் சொன்னார் என்பது.
அல்லதூஉம், இருமுதுகுரவராலும் இவனை எம்போலக் கொண்டு ஒழுகு
என்று தலைமகற்குக் காட்டிக் கொடுக்கப்பட்டான் பாங்கன் என்பதூஉம்,
நீயும் எம்போலக் கொண்டு ஒழுகுவாய் என்று தலைமகனைப் பாங்கற்குக்
காட்டிக் கொடுக்கப்பட்டான் என்பதூஉம் போதரல்வேண்டி இவ்வாறு
பன்மைப் படச் சொன்னார் என்பது. அஃதேயெனின், இயற்கைப் புணர்ச்சி
புணர்ந்த பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டுதாய் இற்செறிக்கில் என்
செய்யுமோ எனின், பார்ப்பார் சான்றோரை முன்னிட்டு அருங்கலங்களோடு
பாங்கன் சென்று வரைந்து எய்துவிக்கும், அங்ஙனம் கிடந்ததே விதி
என்னின், அன்று; இவ்வாற்றாற் புணர்தன் முறைமையாக்கும் விதி எனில்,
தாய்க்குப் புலனாகாமைக்கொள்ளும் என்பது. அஃதேயெனின் ஆயம்
கழிக்கானலிடையே கொண்டு புகுதாது மற்றோர் கானலிடமே கொண்டு
புக்கவிடத்துத் தலைமகன் குறி பிழைப்பும், பாங்கன் அங்குச் சென்ற
செலவின் பிழைப்பும் இவையெல்லாந் தங்கும்பிற எனின், அதுவன்று;
அவ்வாறு படினும் வரைந்து புகும்.

      அதுவன்றிப் பிற்றைஞான்று இக்கூட்டம் நிகழ்விப்பான் நின்ற விதி
பிறிதோர் கானலிடங்கொண்டு புக உள்ளம் பிறப்பிக்குமோ என்பது,
அஃதேயெனின், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பிற்றைஞான்று பாங்கன்
தலைமகனைக் கண்டு, ‘எற்றினான் ஆயிற்று நினக்கு இவ் வேறுபாடு?’ என்று
வினாவினவாறு போல, அன்றேயானும் பிற்றைஞான்றேயானும் தலைமகளது
வேறுபாடு கண்டு, ‘நினக்கு இஃது எற்றினான் ஆயிற்று? என்று தோழி
வினாவாமைக்குக் காரணம் என்னையோ எனின், தலைமகளது வேறுபாட்டை
விதி தோழிக்குப் புலனாகாமைக் கொள்ளும் என்பது. ஆயின் தலைமகன்
வேறுபாட்டையும் பாங்கற்குப் புலனாகாமைக் கொள்ளற்பாற்று, அஃது
அன்றாதற்குக் காரணங் கூறற்பாற்று எனின், விதிக்குக் காரணம்
கூறற்பாற்றன்று என்பதும் ஒன்று; காரணங் கூறினும் பாங்கற்குப்
புலனாயதனால் ஆய பயனுண்டு; அக் கூட்டம் பாங்கன் அறிந்து வினாவ
முடியும். தோழி தலைமகன்மாட்டு வேறுபாடு கண்டறிந்து வினாவப் பாங்கற்
கூட்டம் முடியாது; தோழி தன்னால் ஆவதும் இல்லை. இது காரணம்
என்பது. அஃதேயெனின், ‘ஆங்கவிரண்டே தலைப்பெயல்’ என அமையும்.
‘மரபு’ என்றது எற்றிற்கோ எனின்; தலைப்பெயற்கு இலக்கணம் என்றவாறு.
மரபு எனினும் இலக்கணம் எனினும் எல்லாம் ஒருபொருட் பன்மொழி
என்றவாறு.                                                 (3)