பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 63
 

வாறு; இரந்து குறையுறுதலும் கிழவோன் மேற்றே என்பது - இரத்தலும்
குறையுறுதலும் செய்துநிற்றல் தலைமகற்கு உரித்து என்றவாறு.

      இரத்தல் என்பது, குறையுடையார் செய்யும் செய்கை செய்து
ஒழுகுவது.

      குறையுறுதல் என்பது, இக்குறை இன்றியமையான் என்பதுபடப்
பசைந்து ஒழுகுதல். அஃதேயெனின், இவளால் இக்குறை முடியுமென்று
இரக்குமோ, முடியாதென்று இரக்குமோ எனின், முடியுமென்று
இரக்குமேயெனின், இவளை இகழ்ந்து மதித்தானாம்; தோழி என்பாள்
குற்றேவல் மகள், அவளால் எய்தலாம் என்று கருதினமையான் என்பது;
இகழ்ந்து மதிப்பவே, ‘அருமையும் பெருமையும் காவலுமுடையள் இவளை
எத்திறத்தானும் எய்துவது அரிது’ என்று கருதினான் என்பதனோடு
மாறுகொள்ளும் என்பது.

      இனி, முடியாதென்று இரக்குமே எனின், இரத்தறானே பயமின்று;
ஒருவரால் ஒருகருமம் ஆகாமை அறிந்தே அவருழைச் சென்று அக்
கருமத்திற்கு முயல்வார் நெறியறியாதாரன்றோ என்பது.

      மற்று என்னோ எனின், முடியும் முடியாது என்று சீர்தூக்கிக்கொண்டு
இரப்பான் அல்லன்; தனது ஆற்றாமை மீதூரப்பட்டு இரக்கும் என்பது.
அஃதேயெனின், இவளால் முடியும் முடியாது என்று கருதானாகலான்,
பிறரானும் முடியும் முடியாது என்று கருதானாகல் வேண்டும்; ஆகலான்
பிறரையும் இரக்க அமையாதோ எனின், என்றார்க்கு அஃதன்று; இது
முடியுஞான்று இவளாலே முடிவதாகக் கிடந்ததாகலான், அவ் விதி
இவளுழையே செல்லுமுள்ளம் பிறப்பிக்கும் என்பது. அஃதன்றே
உலகத்தார்க்குப் பண்பின்வழியே ஊக்கம் நிகழும் என்பது.

      இதனை எப்பெற்றி கருதுமோ இவள் எனின், ஐயப்பட்டு நிற்கும்.
‘இவன் ஒரு குறையுடையான்போலும், அக் குறை இன்றியமையான்; அஃது
என்மாட்டது என்று கருதுவேனாயின், இறப்பவும் பெருந்தன்மையனாகலின்
இறப்பவும் சிறியேனுழை வேண்டுங்கருமம் இலனன்றே! அதனால்,
என்கண்ணது எனவும் ஆகாது. யார் அறிவார், சிறியராற் பெரியார் முடிக்குங்
கருமங்களும் உள! அதனால் என் கண்ணது என்பதன் கண்ணும்
ஐயமேயாம்’ என்பது.