பக்கம் எண் :
 
66இறையனார் அகப்பொருள்

பதியும் பெயரும் பிறவும் வினாஅய் என்பது-பதிவினாதல் என்பது எவ்வூர்
என்பது. பெயர் வினாதல் என்பது என்ன பெயர் என்பது. பிறவினாதல்
என்பது, ‘இங்கே சிலமா போந்தன உளவோ, இளையர் போந்தார் உளரோ,
யானை போந்தன உளவோ’ என்று இத் தொடக்கத்தன வினாதல் என்றவாறு.
அதற்குச் செய்யுள்:

               
பதியும் பெயரும் வினாதல்

 ‘நீரின் மலிந்தசெவ் வேனெடு மாறன்நெல் வேலியொன்னார்
 போரின் மலிந்தவெந் தானை உரங்கொண்ட கோன்பொதியிற்
 காரின் மலிந்தபைம் பூம்புனங் காக்கின்ற காரிகையீர்
 ஊரின் பெயருநும் பேரும் அறிய உரைமின்களே
’           (53)


 ‘நிதியின் கிழவன் நிலமகள் கேள்வன்நெல் வேலியொன்னார்
 கதியின் மலிந்தவெம் மாவுங் களிறுங் கவர்ந்து கொண்டான்
 பொதியின் மணிவரைப் பூம்புனங் காக்கும் புனையிழையீர்
 பதியின் பெயருநும் பேரு மறியப் பகர்மின்களே
’           (54)

 ‘அறையார் கழல்மன்ன ராற்றுக் குடியமர் சாய்ந்தழியக்
 கறையா ரயில்கொண்ட கோன்கொல்லிக் கார்ப்புனங் காக்கின்றவான்
 பிறையார் சிறுநுதற் பெண்ணா ரமிழ்தன்ன பெய்வளையீர்
 மறையா துரைமி னெமக்குநும் பேரொடு வாழ்பதியே
’        (55)

 ‘கறையின் மலிந்தசெவ் வேல்வலத் தால்தென் கடையல்வென்ற
 அறையுங் கழலரி கேசரி யந்தண் புகாரனைய
 பிறையின் மலிந்த சிறுநுதற் பேரமர்க் கண்மடவீர்
 உறையும் பதியுநும் பேரு மறிய உரைமின்களே
.’             (56)

   ‘பிறவும்’ என்றதனால், இவையுஞ் சொல்லிச் சென்று நிற்கும்;       
அவற்றிற்குச் செய்யுள்:

                 
வேழம் வினாதல்

 ‘வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த
 திருமா லவன்வஞ்சி யன்னஅஞ் சீறடிச் சேயிழையீர்
 கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டுச்செங்கட்
 பொருமால் களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே
.’ (57)

 ‘முடியுடை வேந்தரும் மும்மத யானையும் மொய்யமருட்
 பொடியிடை வீழத்தென் பூலந்தை வென்றான் புகாரனைய
 வடியுடை வேல்நெடுங் கண்மட வீர்நுங்கள் வார்புனத்திற்
 பிடியொடு போந்ததுண் டோவுரையீரோர் பெருங்களிறே
’    (58)