பக்கம் எண் :
 
78இறையனார் அகப்பொருள்

    ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட
    மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
    செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண்
    துளிதலைத் தலைஇய தளிரன் னோளே
.’            (குறுந்-222)


                  
 கொண்டுநிலைகூற்று

       அதுகேட்டுத் தலைமகன், ‘இவள் இனி எனக்கு இக்குறை முடிக்கும்’
என, முன்னின்ற ஆற்றாமை நீங்கி ஆற்றும் என்பது. என்னை, உலகத்து
ஒருபொருள் முடியாதெனக் கவன்று நின்றார், முடிப்பதோர் உபாயம் கண்ட
ஞான்று அப்பொருள் எய்தினாற்போல மகிழ்பவாகலின், இவனும் தன்
உடைய குறை எய்தினானேபோலப் பெயர்ந்தான். இதனைக் கொண்டு நிலை
கூற்று என்று சொல்லுவது; என்னை, தலைமகன் இறந்துபடுவானை அச்
சொல் தாங்கிக்கொண்டு நின்றமையான் என்பது. இதுசொல்லி, இவனை
ஆற்றுவித்துத் தலைமகள் மாட்டுச் சென்று, இக்குறை முடிக்கும் உபாயம்
ஆராய்வாளாவது. (9)

                      
சூத்திரம்-10

         உள்ளத் துணர்ச்சி தெள்ளிதிற் கரந்து
        கிழவோள் தேஎத்துக் குறையுறூஉம் உளவே
        குறிப்பறி வுறூஉங் காலை யான.

 

       என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி
தலைமகளைக் குறைநயப்பிக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 

       இதன் பொருள்: உள்ளத்து உணர்ச்சி தெள்ளிதிற் கரந்து என்பது-ன் உள்ளத்து நின்ற உணர்ச்சியை நன்கு புலப்படாமை மறைத்து என்றவாறு;
கிழவோள் தேஎத்து என்பது - தலைமகள்மாட்டு என்றவாறு; குறையுறூஉம்
உளவே என்பது - குறை வேண்டலும் உள என்றவாறு; குறிப்பு அறிவுறூஉங்
காலை ஆன என்பது - தலைமகனது ஆற்றாமைக் குறிப்பினை
அறிவுறுத்துமிடத்து என்றவாறு.
 

       ‘உள்ளத்துணர்ச்சி’ என்பது யாதோ எனின், கூட்டம் உண்மை
உணர்ந்த உணர்ச்சி யென்றுமாம்; அல்லதூஉம், அவர் இக்குறை
இன்றியமையார் என உணர்ந்த உணர்ச்சி என்றுமாம்; அல்லதூஉம், யான்
குறையுற அவள் இதனை ஆற்றுங்கொல்லோ என உணர்ந்த உணர்ச்சி
யென்றுமாம்; அல்லதூஉம், என்னினாய கூட்டம் முடியாதுவிடின் இவன்