பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 79
 

இறந்துபடுமாகலான் இவளைக் குறைநயப்பித்துக்கொண்டு

முடிக்கலாங்கொல்லோ என உணர்ந்த உணர்ச்சி யென்றுமாம்.

     ‘தெள்ளிதிற் கரந்து கிழவோள் தேஎத்துக் குறையுறூஉம் உளவே’
என்பது, இவள் கூட்டமுண்மை உணர்ந்தாள் போன்று குறையுற்று நின்றாள்
எனத் தலைமகட்குப் புலனாகாமை நன்கு மறைத்துக் குறையுறூஉங்
குறையுறவும் உடையள் தலைமகள் மாட்டுக் குறைநயப்புக் கூறுமிடத்து
என்றவாறு.

      ‘உண்டு’ என்னாது, ‘உள‘ என்ற பன்மைச்சொல் எற்றிற்கோ எனின்,
குறையுறவுதாம் பல என்றற்குச் சொல்லப்பட்டது. அவை யாவையோ எனின்,
மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தலும், வலிதாகச் சொல்லிக்
குறைநயப்பித்தலும் என இவை.

     அவற்றுள், மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பிக்குமாறு: ‘இங்கு வந்து
ஒழுகாநின்றான் ஒரு தோன்றல் உளன், அவன் என்னினாயதொரு
குறையுடையான்போலும், ஒருவரால் ஒரு குறையுறவு கொள்ளுந்தகைமையானும்
அல்லன், ஒருவருக்கு ஒரு குறை முடிப்பினல்லது; அதனால், அவன்,
அக்குறை இன்றியமையான்; அமையாமை நோக்கி, யான் அக்குறை
முடிப்பார் தன்மையேன் ஆயினேனாய் வைத்து ஒரு பொய் பொய்த்தேன்,
பொய்ப்பேனும் பொய்ப்பலென்று பொய்த்தேன்; ஏனெனில்,
இப்பொழுதைக்குள்ளாய் அப் பொய்யினாற் பின்னுமோர் உபாயத்தான்

முடித்துக்கொள்ளப் பெறாரோ என்று பொய்த்தேன்; என்னை, உயிருடையார்
எய்தாப் பொருளில்லை என்பதனான் அவ்வாறு கருதிப் பொய்த்தேற்கு அவர்
அதனை மெய்யென்று கருதிக்கொண்டு சென்றார், தாம் பொய்யறியாமையின்;
அன்னார் இன்று வருவர், வந்தால், இக் குறை முடியாமையிற் பொய்யென
உணர்வாராகாரோ?’ என்னும்; அதற்குச் செய்யுள்:
 

   ‘பாமாண் தமிழ்உடை வேந்தன் பராங்குசன் கொல்லிப்பைம்பூந்
   தேமாந் தழையொடு கண்ணியும் கொண்டிச் செழும்புனத்துள்
   ஏமாண் சிலையண்ணல் வந்துநின் றார்பண்டு போலவின்று
   பூமாண் குழலாய் அறியேன் உரைப்பதொர் பெய்ம்மொழியே.’  (87)
 

அல்லதூஉம்,


   ‘கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன்பொதியிற்
   கடியார் புனத்தயல் வைகலுங் காண்பல் கருத்துரையான்
   அடியார் கழலன் அலங்கலங் கண்ணியன் மண்ணளந்த
   நெடியான் சிறுவன்கொல் லோவறி யேனொர் நெடுந்தகையே’ (88)

(பாடம்) 1. தெரி.